search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சமையல் கியாஸ் விலை அதிரடி குறைப்பால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி
    X

    சமையல் கியாஸ் விலை அதிரடி குறைப்பால் இல்லத்தரசிகள் மகிழ்ச்சி

    • கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது.
    • ரூ.1000 வரை உயர்த்தி விட்டு ரூ.200 குறைத்திருக்கிறார்கள். மேலும் குறைத்தால் நன்றாக இருக்கும்.

    சென்னை:

    பெண்கள் வீடுகளில் பயன்படுத்தும் சமையல் கியாஸ் விலை விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து கொண்டே சென்றது. ஒவ்வொரு ஆண்டும் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை அதிகரித்துக்கொண்டே சென்று கடந்த மார்ச் மாதம் 1118 ரூபாய் 50 காசாக உயர்ந்தது.

    2022-ம் ஆண்டு மார்ச் மாதத்தில் ரூ.915 ஆக இருந்த சிலிண்டர் விலை இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் 53 ரூபாய் 50 காசு உயர்த்தப்பட்டது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை முதல் முறையாக ரூ. ஆயிரத்தை தாண்டியது.

    இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.1068.50 ஆக இருந்தது. இதையடுத்து கடந்த மார்ச் மாதம் சிலிண்டரின் விலை ரூ.50 அதிகரித்தது. இதன் மூலம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை மேலும் உயர்ந்து ரூ.1118.50 ஆனது.

    கடந்த 6 மாதங்களாக சமையல் கியாஸ் இதே விலைக்கே விற்பனை செய்யப்பட்டு வந்தது. இப்படி சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ஏறிக்கொண்டே சென்றதால் குடும்ப தலைவிகள் கடும் சிரமத்தை சந்தித்தனர்.

    இந்த சிலிண்டர் விலை உயர்வு நடுத்தர மற்றும் ஏழை மக்களை கடுமையாக பாதித்தது. தங்களது மாத வருவாயில் குறிப்பிட்ட தொகையை கியாஸ் சிலிண்டருக்கே ஒதுக்க வேண்டியுள்ளது என்று கூறி அவர்கள் வேதனைப்பட்டு வந்தனர்.

    இப்படி சிலிண்டர் விலை தாறுமாறாக ஏறி இருந்ததால் கிராமப்புறங்களில் பலர் விறகு அடுப்புகளுக்கும் மாறினார்கள். பொதுமக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு சமையல் கியாஸ் சிலிண்டர் விலையை வெகுவாக குறைக்க வேண்டும் என்று அரசியல் கட்சிகள் கோரிக்கை விடுத்து வந்தன. சிலிண்டர் விலை குறையுமா? என இல்லத்தரசிகளும் எதிர்பார்த்து காத்திருந்தனர்.

    இந்த நிலையில் சமையல் கியாஸ் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்பட்டிருக்கிறது. இதன் மூலம் சென்னையில் ரூ.1118.50 ஆக இருந்த கியாஸ் சிலிண்டரின் விலை ரூ.918.50 ஆக குறைந்திருக்கிறது. கடந்த 2022-ம் ஆண்டு மார்ச் மாதம் சமையல் கியாஸ் சிலிண்டரின் விலை ரூ. 915 ஆக இருந்துள்ளது. அதன் பின்னர் விலையேறிக்கொண்டே சென்ற நிலையில் 1½ ஆண்டுகளுக்கு பிறகு சிலிண்டர் விலை 1000-க்கும் கீழ் சென்று ரூ.918 ஆக குறைந்திருக்கிறது.

    இந்த விலை குறைப்பு இன்று முதல் (புதன்கிழமை) அமலுக்கு வந்துள்ளது. இது இல்லத்தரசிகள் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இருப்பினும் பெண்கள் பலர் சிலிண்டர் விலையை மேலும் குறைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

    இது தொடர்பாக பெண்கள் தெரிவித்திருக்கும் கருத்துக்கள் வருமாறு:-

    சூளைமேடு கீதா: கியாஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்டுள்ளது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது. எனக்கு விவரம் தெரிந்த நாளில் இருந்தே எங்கள் வீட்டில் கியாஸ் சிலிண்டரை பயன்படுத்தி வருகிறோம். எனக்கு சிறு வயதாக இருக்கும்போது 30 ரூபாய் கொடுத்து எனது தாய் சிலிண்டர் வாங்கி இருக்கிறார். இப்படி குறைவான தொகையை கொடுத்தே வாங்கப்பட்ட சிலிண்டர் விலை படிப்படியாக உயர்ந்து ஆயிரத்தை தாண்டியதால் வருமானத்தில் பெரும் பகுதியை சிலிண்டருக்கே செலவிட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டிருந்தது. 200 ரூபாய் குறைக்கப்பட்டிருப்பதன் மூலம் அந்த பணம் நிச்சயம் சேமிப்பாகி வேறு ஒரு செலவுக்கு பயன்படும். இந்த விலை குறைப்பு மகிழ்ச்சி அளித்துள்ள போதிலும் இன்னும் குறைத்தால் நன்றாக இருக்கும். மேலும் 200 ரூபாய் குறைக்கலாம்.

    மாங்காடு காயத்ரி: கியாஸ் சிலிண்டர் விலை உயர்வு என்பது ஒவ்வொரு மாதமும் பெரும் சுமையாகவே மாறி இருந்தது. இதனால் சிலிண்டர் விலை குறையுமா? என்று அனைத்து பெண்களுமே எதிர்பார்த்து காத்திருந்தனர். தற்போது கியாஸ் சிலிண்டர் விலையை ரூ.200 குறைத்திருப்பது வரவேற்கத்தக்கது தான்.

    ரூ.1000 வரை உயர்த்தி விட்டு ரூ.200 குறைத்திருக்கிறார்கள். மேலும் குறைத்தால் நன்றாக இருக்கும்.

    பிரேமலதா: சமையல் கியாஸ் சிலிண்டர் விலை 70 ரூபாயாக இருந்த நாளில் இருந்தே சிலிண்டரை பயன்படுத்தி வருகிறோம். சிறிது சிறிதாக சிலிண்டர் விலையை உயர்த்தி 1000-க்கும் மேல் கொண்டு சென்று விட்டனர். தற்போது அதனை 200 ரூபாய் குறைத்திருப்பது நல்ல விஷயம்தான். மத்திய அரசு இதில் கவனம் செலுத்தி விலையை குறைத்து கட்டுக்குள் வைத்திருக்க வேண்டும்.

    இவ்வாறு பெண்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.

    Next Story
    ×