search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    தீபாவளி பண்டிகை- திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 2 நாளில் 2 லட்சம் பேர் பயணம்
    X

    திருப்பூரில் இருந்து புறப்பட்ட ரெயிலில் நின்றவாறு பயணம் செய்த பயணிகள்.

    தீபாவளி பண்டிகை- திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு 2 நாளில் 2 லட்சம் பேர் பயணம்

    • தீபாவளியையொட்டி கடந்த ஒரு வாரமாக பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன.
    • மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, பெரியகுளம், கம்பம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன.

    திருப்பூர்:

    திருப்பூரில் உள்ள பனியன் நிறுவனங்களில் நெல்லை, தூத்துக்குடி, மதுரை, சேலம், தேனி, கம்பம், நாகர்கோவில் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் மற்றும் வடமாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

    ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை யொட்டி பனியன் நிறுவனங்கள் சார்பில் தொழிலாளர்களுக்கு போனஸ் வழங்குவதுடன் ஒரு வாரம் வரை விடுமுறையும் அளிக்கப்படுவது வழக்கம்.

    இந்தாண்டு தீபாவளியையொட்டி கடந்த ஒரு வாரமாக பனியன் நிறுவனங்களில் தொழிலாளர்களுக்கு போனஸ் மற்றும் புத்தாடைகள் வழங்கப்பட்டன. அதனைப்பெற்று கொண்ட தொழிலாளர்கள் தங்களுக்கு தேவையான ஜவுளி உள்ளிட்ட பொருட்களை வாங்கி கொண்டு மகிழ்ச்சியுடன் தங்களது சொந்த ஊர்களுக்கு சென்றனர். பெரும்பாலான பனியன் நிறுவனங்களுக்கு நேற்று மதியம் முதல் தீபாவளி விடுமுறை அளிக்கப்பட்டது. இதனால் நேற்று மதியம் முதலே நெல்லை, தூத்துக்குடி, நாகர்கோவில் உள்பட தென் மாவட்டங்களை சேர்ந்த தொழிலாளர்கள் சாரை சாரையாக திருப்பூரில் இருந்து சென்ற வண்ணம் இருந்தனர். அவர்களின் வசதிக்கேற்ப திருப்பூர் புதிய, பழைய பஸ் நிலையம், கோவில்வழி பஸ் நிலையங்களில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

    இரவு ஏராளமான பயணிகள் குவிந்தனர். அவர்களின் வசதிக்காக விடிய விடிய திருப்பூரில் இருந்து பஸ்கள் இயக்கப்பட்டன.

    மேலும் திருப்பூர் ரெயில் நிலையத்திலும் நேற்றிரவு பயணிகள் குவிந்தனர். இன்று காலையும் பயணிகள் கூட்டம் அலைமோதியது. நெல்லை, நாகர்கோவில், திருச்சி, கரூர், உள்ளிட்ட தென்மாவட்டங்களுக்கு செல்லும் ரெயிலில் அதிகம் பேர் பயணித்தனர். பயணிகள் கூட்டம் உள்ள வரை தொடர்ந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று போக்குவரத்து அதிகாரிகள் தெரிவித்தனர்.

    திருப்பூரில் இருந்து வெளியூர்களுக்கு இதுவரை பஸ்கள், ரெயில்கள் மூலம் 2 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மதுரை, திருநெல்வேலி, தூத்துக்குடி, தேனி, பெரியகுளம், கம்பம் மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் கோவில் வழி பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. பல்லடம், கோவை, பொள்ளாச்சி, உடுமலை, வால்பாறை ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் கலெக்டர் அலுவலகத்தின் எதிரே உள்ள பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டது.

    கரூர், திருச்சி, தஞ்சாவூர், சேலம் மற்றும் ஈரோடு பஸ்கள் திருப்பூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து இயக்கப்பட்டன. அவினாசி வழியாக கோவை, மேட்டுப்பாளையம், நீலகிரி, மைசூர், சத்தியமங்கலம், புளியம்பட்டி ஆகிய ஊர்களுக்கு செல்லும் பஸ்கள் திருப்பூர் குமார் நகர் பழைய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே 60 அடி ரோட்டில் இருந்து இயக்கப்பட்டன.

    Next Story
    ×