search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    குழந்தைகள் படிப்பதற்காக 1000 புத்தகங்களை வழங்கிய 7-ம் வகுப்பு மாணவி: டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு
    X

    குழந்தைகள் படிப்பதற்காக 1000 புத்தகங்களை வழங்கிய 7-ம் வகுப்பு மாணவி: டி.ஜி.பி. சைலேந்திரபாபு பாராட்டு

    • குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படும் நூலகங்களுக்கு அகர்சனா தொடர்ந்து புத்தகங்களை வழங்கி வருகிறார்.
    • இதுவரை 7 முறைக்கு மேல் அகர்சனா இதுபோன்று புத்தகங்களை வழங்கி பாராட்டு பெற்று உள்ளார்.

    சென்னை:

    சென்னை நொளம்பூர் போலீஸ் நிலையத்தில் குழந்தைகளின் படிப்பாற்றலை வளர்ப்பதற்காக நூலகம் திறக்கப்பட்டுள்ளது. இந்த நூலகத்தில் குழந்தைகளின் அறிவை வளர்க்கும் வகையிலான புத்தகங்களும், கார்ட்டூன் புத்தகங்களும் உள்ளன.

    இதனை டி.ஜி.பி. சைலேந்திரபாபு நேற்று திறந்து வைத்தார்.

    இந்த நிகழ்ச்சியில் இணை கமிஷனர் மனோகரன், இன்ஸ்பெக்டர் ஜார்ஜ் மில்லர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த நூலகத்துக்கு ஐதராபாத்தை சேர்ந்த 7-ம் வகுப்பு மாணவி அகர்சனா 1000 புத்தகங்களை வழங்கினார். டி.ஜி.பி. சைலேந்திரபாபு அவரை பாராட்டி சான்றிதழ் வழங்கினார்.

    மாணவியின் தந்தை சதீஷ், அகர்சனாவின் இந்த செயலை பாராட்டி தொடர்ந்து ஊக்கப்படுத்தியுள்ளார்.

    இதன் காரணமாக இதுபோன்று குழந்தைகளுக்காக ஏற்படுத்தப்படும் நூலகங்களுக்கு அகர்சனா தொடர்ந்து புத்தகங்களை வழங்கி வருகிறார். இதுவரை 7 முறைக்கு மேல் அகர்சனா இதுபோன்று புத்தகங்களை வழங்கி பாராட்டு பெற்று உள்ளார்.

    இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட டி.ஜி.பி. சைலேந்திரபாபு மாணவர்களின் புத்தகம் படிக்கும் ஆர்வத்தை தூண்டும் வகையில் பேசினார். இது தொடர்பாக அவர் பல்வேறு கருத்துக்களை மாணவர்களிடம் எடுத்துக்கூறி ஆலோசனைகளையும் வழங்கினார். பின்னர் மாணவ-மாணவிகளுடன் அமர்ந்து தேநீர் அருந்தினார். புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

    நொளம்பூர் மற்றும் அதன் சுற்று வட்டாரத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் பயன்பெறும் வகையில் இந்த நூலகம் திறக்கப்பட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×