search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது- மின்சார யூனிட் விவரங்களை நேரில் பார்த்து கணக்கிடுகிறார்கள்
    X

    வீடு வீடாக விண்ணப்பங்களை சரிபார்க்கும் பணி தொடங்கியது- மின்சார யூனிட் விவரங்களை நேரில் பார்த்து கணக்கிடுகிறார்கள்

    • வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது.
    • விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    சென்னை:

    குடும்பத்தலைவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்பட உள்ள மகளிர் உரிமைத் தொகை திட்டம் அடுத்த மாதம் (செப்டம்பர்) 15-ந்தேதியில் இருந்து செயல்படுத்தப்பட உள்ளது. முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் காஞ்சிபுரத்தில் இந்த திட்டத்தை தொடங்கி வைக்க உள்ளார்.

    இதற்காக தமிழ்நாடு முழுவதும் ஒரு கோடியே 63 லட்சம் பெண்களிடம் இருந்து விண்ணப்பங்கள் பெறப்பட்டு கைபேசி வழியாக பதிவு செய்யப்பட்டு உள்ளது.

    தமிழ்நாடு முழுவதும் முகாம்களில் பெறப்பட்ட விண்ணப்பங்களில் அளிக்கப்பட்ட தகவல்கள் அனைத்தும் உண்மையாக உள்ளதா? என்பதை கண்டறியவும், விடுபட்ட விவரங்களை விண்ணப்பதாரர்களிடம் கேட்டு பெறவும் அரசு முடிவு செய்துள்ளது.

    இதற்காக வீடு வீடாக சென்று கள ஆய்வு செய்யும் பணி இன்று தொடங்கி உள்ளது. இதற்காக நியமிக்கப்பட்ட தன்னார்வலர்கள், மற்றும் கல்வித்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வீடு வீடாக சென்று விண்ணப்பதாரர்களிடம் விசாரித்து வருகின்றனர். வீடு சொந்த வீடா? வாடகை வீடா? என்ன வேலை பார்க்கிறார்கள். கார் இருக்கிறதா? மாத வருமானம் எவ்வளவு? மின்சார பயன்பாடு 2 மாதத்திற்கு எவ்வளவு பயன்படுத்தப்பட்டு உள்ளது என்பதையும் பார்க்கிறார்கள்.

    விண்ணப்பத்தில் குறிப்பிட்டுள்ள விவரங்களும், விசாரிக்கும்போது கிடைக்கும் விவரங்களும் சரிவர ஒத்துப்போகிறதா? என்பதையும் பார்க்கிறார்கள். விண்ணப்பத்தில் விடு பட்டுள்ள விவரங்களை கேட்டு அதை பதிவு செய்து கொள்கிறார்கள்.

    பெரும்பாலான வீடுகளில் மின்சார பயன்பாடு பற்றி விண்ணப்பத்தில் குறிப்பிடப்படாமல் உள்ளதால் மின்சார யூனிட் எவ்வளவு உபயோகப்படுத்தி உள்ளனர் என்பதையும் பார்த்து தெரிந்து கணக்கிட்டு கொள்கிறார்கள்.

    இதுபற்றி உயர் அதிகாரி கூறுகையில், தகுதியான நபர்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவதற்காகத்தான், வீடுவீடாக சரிபார்க்கும் பணி தொடங்கி உள்ளதாகவும், விண்ணப்பத்தில் சரிவர பூர்த்தி செய்யாத விவரங்களை கேட்டு பெற்று பதிவு செய்து வருகிறார்கள் என்றும் தெரி வித்தார். இந்த தரவுகள் அனைத்தும் முழுமையாக கிடைத்ததும் இதற்கென உருவாக்கப்பட்டு உள்ள சாப்ட்வேர் செயலி மூலம் ஒவ்வொரு விண்ணப்பமும் சரிபார்க்கப்படும். அதில் எந்ததெந்த விண்ணப்பங்கள் தகுதி வாய்ந்த விண்ணப்பங்கள் என்பது தானாகவே தெரிந்து விடும்.

    அந்த பட்டியல் இந்த மாத இறுதிக்குள் தயாராகி விடும். அதன்மூலம் யார்-யாருக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படும் என்பது தெரிந்து விடும் என்றும் அந்த அதிகாரி தெரிவித்தார்.

    Next Story
    ×