search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்
    X

    டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழகத்தில் ரூ.100 கோடியில் கலைஞர் ஆராய்ச்சி மையம்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

    • சென்னையில் மட்டும் 15 இடங்கள் என ஒவ்வொரு ஆண்டும் 1260 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.
    • திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணியும் வரைபடம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    முதலமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ், புதிய பயனாளிகளை சேர்க்கும் முகாம்கள், தொடர்ச்சியாக நடந்து வருகிறது.

    கடந்த வாரம் சைதாப்பேட்டை வார்டுகளில் இந்த முகாம்கள் நடந்தது. இதன் மூலம் 1019 புதிய பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின்கீழ் உறுப்பினர் அட்டை கள் வழங்கப்பட்டது.

    தொடர்ச்சியாக இந்த தொகுதியில் முகாம்கள் நடக்கிறது. அந்த வகையில், இன்று 4 இடங்களில் புதிய மருத்துவ காப்பீட்டு திட்டடத்தில் பயனாளிகளை சேர்க்கிற முகாம் நடைபெறுகிறது.

    முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தின்கீழ், பயன்பெறுபவர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்றும் உண்மையான பயனாளிகளை இந்த திட்டத்தில் இணைக்க வேண்டும் என்றும் முதலமைச்சர் அறிவுறுத்தி உள்ளார்.

    அந்த வகையில் தமிழ்நாட்டில் ஏற்கனவே வரும் முன் காப்போம் என்ற திட்டம் கலைஞரின் வரும் முன் காப்போம் என்ற பெயரில் கடந்த 3 ஆண்டாக சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஒன்றியத்துக்கு 3 இடங்களிலும், மாநகராட்சி பகுதியில் 4 இடங்களிலும், சென்னையில் மட்டும் 15 இடங்கள் என ஒவ்வொரு ஆண்டும் 1260 இடங்களில் முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது.

    இதில் ஒவ்வொரு முகாமிலும், புதிய பயனாளிகளை சேர்க்கும் பணியும் நடந்தது. கடந்த 2 ஆண்டுக்கு முன்பு வரை, தமிழ்நாட்டில் காப்பீட்டாளர்களின் எண்ணிக்கை 1 கோடியே 37 லட்சத்து 10 ஆயிரத்து 107 குடும்பங்கள் ஆகும்.

    இப்போது பல்வேறு முகாம்கள் தொடர்ச்சியாக நடத்தப்பட்டு புதிய பயனாளிகள் குடும்பங்களை தேர்வு செய்கிற பணி நடைபெற்று இன்றைக்கு 1 கோடியே 44 லட்சத்து 72 ஆயிரத்து 38 குடும்பங்களாக உயர்ந்து உள்ளது.

    2 ஆண்டுகளில் மட்டும் 7 லட்சத்து 62 ஆயிரத்து 231 புதிய குடும்பங்கள் இந்த திட்டத்தின் மூலம் இணைக்கப்பட்டுள்ளது. இதில் சிகிச்சை அளிக்கும் மருத்துவமனைகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

    மருத்துவ துறையின் அடுத்த கட்டமாக 'மருத்துவ ஆராய்ச்சி மையம்' டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவ பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்படும் என்று ஏற்கனவே அறிவித்து இருந்தோம். அதன்படி இங்கு ரூ.100 கோடி செலவில் ஒரு மிகப்பெரிய மருத்துவ ஆராய்ச்சி மையம், கலைஞர் நூற்றாண்டு மருத்துவ ஆராய்ச்சி மையம் என்ற வகையில் புதிய கட்டிடம் வர இருக்கிறது. அதற்கான இடம் தேர்வு செய்யும் பணி முடிவுற்றுள்ளது. திட்ட மதிப்பீடுகள் தயார் செய்யும் பணியும் வரைபடம் தயாரிக்கும் பணியும் நடைபெற்று வருகிறது.

    மிக விரைவில் டெண்டர் விடப்பட்டு, முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட உள்ளது.

    சைதாப்பேட்டையில் இன்று நடைபெற்று வரும் முகாம் போல் 234 தொகுதிகளிலும் புதிய பயனாளிகளை சேர்க்கும் முகாம் நடத்தப்படும். இதில் 100 தொகுதிகளில் ஒரே நாளில் 100 முகாம்கள் நடத்தப்படும். அந்த தொகுதிகள் தேர்வு செய்யும் பணியும் நடந்து வருகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×