search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    கிறிஸ்தவ மக்கள் மீதான அ.தி.மு.க.வின் பாசப்பிணைப்பை எப்போதும் பிரிக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி
    X

    கிறிஸ்தவ மக்கள் மீதான அ.தி.மு.க.வின் பாசப்பிணைப்பை எப்போதும் பிரிக்க முடியாது- எடப்பாடி பழனிசாமி

    • கிறிஸ்தவ மக்களின் புனித தலமான ஜெருசலேம் சென்றுவர தமிழக அரசின் மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டது.
    • சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. என்றென்றும் திகழும். இதை யாராலும் மாற்ற முடியாது.

    சென்னை:

    அ.தி.மு.க. சார்பில் கிறிஸ்துமஸ் விழா சென்னையை அடுத்த வானகரத்தில் உள்ள இயேசு அழைக்கிறார் வளாகத்தில் நடந்தது.

    இதில் இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்கேற்று கிறிஸ்துமஸ் கேக் வெட்டி ஆயர்களுக்கு ஊட்டினார். பின்னர் நலத்திட்ட உதவிகளை அவர் வழங்கி பேசியதாவது:-

    இயேசு கிறிஸ்துவின் போதனைகள் மக்களின் அன்றாட வாழ்வில் அமைதி, இரக்கம், பணிவு, நல்லிணக்கம், கருணை ஆகியவற்றை நிலை நிறுத்துவதோடு அனைத்து சமூக மக்களிடையே சகோதரத்துவத்தை மேம்படுத்துகிறது.

    கிறிஸ்தவ மக்களின் புனித தலமான ஜெருசலேம் சென்றுவர தமிழக அரசின் மூலம் நிதி உதவி அளிக்கப்பட்டது. ரூ.28 ஆயிரமாக இருந்த நிதி உதவி ரூ.38 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்பட்டது.

    மேலும் கிறிஸ்தவ தேவாலயத்தின் புனரமைப்பு நிதி ரூ.5 கோடியாக உயர்த்தி வழங்கியது அ.தி.மு.க. அரசு, சிறுபான்மை கல்வி நிறுவனங்கள் சுதந்திரமாகவும், முழுமையாகவும் செயல்படும் விதத்தில் அரசின் முழுமையான ஒத்துழைப்பு வழங்கப்பட்டது.

    சிறுபான்மை மக்களின் நலன் கருதி 'சிறுபான்மை ஆணையம்' அமைப்பு ரீதியாக விரிவுபடுத்தப்பட்டு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரித்து அரசாணை வெளியிடப்பட்டது.

    தலித் கிறிஸ்தவர்களுக்கு அரசால் வழங்கப்படும் முன்னுரிமைகள் முழுமையாக கிடைக்கப்பெற வேண்டும் என்பதில் அ.தி.மு.க. கொள்கை ரீதியாக உறுதியுடன் நிலைப்பாட்டில் இருக்கிறது.

    கிறிஸ்தவ மக்கள் மீதான அ.தி.மு.க.வின் பாசப்பிணைப்பை எப்போதும் பிரிக்க முடியாது. சிறுபான்மை மக்களின் பாதுகாப்பு அரணாக அ.தி.மு.க. என்றென்றும் திகழும். இதை யாராலும் மாற்ற முடியாது.

    இவ்வாறு அவர் பேசினார்.

    விழாவில் புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், பெருந்தலைவர் மக்கள் கட்சி தலைவர் என்.ஆர்.தனபாலன், த.மா.கா. பொதுச்செயலாளர் விடியல் சேகர், புரட்சி பாரதம் கட்சி தலைவர் ஜெகன்மூர்த்தி, முன்னாள் அமைச்சர்கள் பொன்னையன், கே.பி.முனுசாமி, நத்தம் விசுவநாதன், திண்டுக்கல் சீனிவாசன், தளவாய் சுந்தரம், டி.ஜெயக்குமார், எஸ்.பி.வேலுமணி, பி.தங்கமணி, கடம்பூர் ராஜூ, டாக்டர் சி.விஜயபாஸ்கர், பா.வளர்மதி, கோகுல இந்திரா, எஸ்.அப்துல்ரகீம், மாதவரம் மூர்த்தி, அவைத்தலைவர் தமிழ்மகன் உசேன், முன்னாள் எம்.எல்.ஏ. ஐ.எஸ்.இன்பதுரை, அலெக்சாண்டர் மற்றும் ஜான் மகேந்திரன், மதுர வாயல் கிழக்குப்பகுதி செயலாளர் தேவதாஸ், எம்.ஆர்.முனியன், ஏ.மூர்த்தி, ஏ.பரத், பகுதி செயலாளர் நொளம்பூர் இம்மானுவேல், அம்மா பேரவை பகுதி செயலாளர் முகப்பேர் இளஞ்செழியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    முன்னதாக தென்னிந்திய திருச்சபை முன்னாள் பிரதம பேராயர் தேவகடாட்சம், பிஷப் ராஜாசிங், பாதிரியார்கள் ஸ்டான்லி செபாஸ்டியன், ராபின் ரவிக்குமார், சார்லஸ் வெஸ்லி ஆகியோர் அருளாசி வழங்கினர்.

    விழாவிற்கான ஏற்பாடுகளை முன்னாள் அமைச்சரும், திருவள்ளூர் மத்திய மாவட்ட செயலாளருமான பா.பென்ஜமின் விரிவாக செய்து இருந்தார். முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு அவரது தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

    Next Story
    ×