search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் முருகானந்தம் போட்டி?
    X

    ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி சார்பில் முருகானந்தம் போட்டி?

    • ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார்.
    • வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் சில தினங்களில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார்.

    ஈரோடு:

    ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணி சார்பில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிடுகிறார்.

    இதேபோல் தே.மு.தி.க. சார்பில் ஆனந்த், அ.ம.மு.க. சார்பில் சிவபிரசாந்த் ஆகியோர் போட்டியிடுகின்றனர். நாம் தமிழர் கட்சி வேட்பாளர் நாளை அறிவிக்கப்படுகிறது.

    இதேபோல் அ.தி.மு.க. வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என்று எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். இந்த நிலையில் ஓ.பன்னீர்செல்வமும் தேர்தலில் போட்டியிடுவோம் என்று அறிவித்துள்ளார். எனவே ஓ.பி.எஸ். அணி சார்பில் யார் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

    ஈரோடு மாநகர மாணவரணி அ.தி.மு.க. பொருளாளராக இருந்த முருகானந்தம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஓ.பி.எஸ். அணியில் இணைந்தார். அவருக்கு ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் பதவி கொடுக்கப்பட்டது. எனவே மாவட்ட செயலாளராக இருக்கும் முருகானந்தம் ஈரோடு கிழக்கு தொகுதியில் ஓ.பி.எஸ். அணி வேட்பாளராக போட்டியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இதுகுறித்து ஓ.பி.எஸ். அணி நிர்வாகிகள் கூறியதாவது:-

    இந்த தேர்தலில் போட்டியிட நாங்கள் தயாராக உள்ளோம். வேட்பாளர் யார் என்பது குறித்து இன்னும் சில தினங்களில் ஓ.பன்னீர்செல்வம் அறிவிப்பார். தற்போது பூத் கமிட்டி அமைத்து அது தொடர்பான அறிக்கை அவருக்கு வழங்கப்பட்டுள்ளது. எனவே விரைவில் தேர்தல் பொறுப்பாளர்கள் நியமிக்கப்பட்டு தேர்தல் பணியை தொடங்குவோம்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    தங்களது பலத்தை நிரூபிக்கும் வகையில் அ.தி.மு.க இரு அணிகளும் நேருக்கு நேராக ஈரோடு கிழக்கு தொகுதியில் களம் இறங்குவதால் மிகுந்த பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×