search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி வைகை அணையில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் கைது
    X

    58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க கோரி வைகை அணையில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் கைது

    • கடந்த 3 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
    • கால்வாய் வழியாக செல்லும் நீர் வழியோர கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்த உதவியது.

    ஆண்டிபட்டி:

    தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரமுள்ள வைகை அணையில் இருந்து மதுரை, தேனி, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை ஆகிய 5 மாவட்டங்களுக்கு குடிநீர் மற்றும் பாசனத்துக்கு தண்ணீர் திறக்கப்படுகிறது.

    கடந்த மாதம் அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டியதைத் தொடர்ந்து மதுரை உள்பட 5 மாவட்டங்களுக்கும் முறை வைத்து தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் கடந்த 11-ந் தேதி முதல் மதுரை, ராமநாதபுரம், சிவகங்கை மாவட்ட பூர்வீக பாசனத்துக்கு தண்ணீர் வைகை ஆற்றின் வழியாக திறக்கப்படுகிறது.

    இந்த தண்ணீர் வருகிற 26-ந் தேதி வரை முறை வைத்து திறக்கப்படும் என்பதால் ஆற்றின் கரையோரமுள்ள மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

    ஆனால் மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதி விவசாயிகளுக்கு 58-ம் கால்வாயில் தண்ணீர் திறக்க வலியுறுத்தி தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். வைகை அணையில் இருந்து 58-ம் கால்வாய் வழியாக திறந்து விடப்படும் தண்ணீரால் உசிலம்பட்டி பகுதியில் உள்ள 200க்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெற்று வருகிறது.

    100க்கும் மேற்பட்ட சிறிய குளங்கள் நிரம்பியது. மேலும் கால்வாய் வழியாக செல்லும் நீர் வழியோர கிராமங்களில் உள்ள கிணறுகளின் நீர் மட்டத்தை உயர்த்த உதவியது. இதனால் இறவை பாசனம் மேம்பட்டது.

    தற்போதும் பெரியாறு, வைகை அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும் 58ம் கால்வாயில் தண்ணீர் திறக்காததால் விவசாயிகள் அணையின் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட முயன்றனர். இது குறித்து தகவல் அறிந்ததும் வைகை அணை போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து முன் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்த முயன்ற விவசாயிகளை கைது செய்தனர்.

    வைகை அணையின் நீர் மட்டம் 65.26 அடியாக உள்ளது. வரத்து 1978 கன அடி. திறப்பு 1869 கன அடி. இருப்பு 4687 மி.கன அடி. முல்லைப்பெரியாறு அணையின் நீர் மட்டம் 135.90 அடி. வரத்து 928 கன அடி. திறப்பு 1500 கன அடி. இருப்பு 6093 மி.கன அடி.

    மஞ்சளாறு அணையின் நீர் மட்டம் 56.10 அடி. வரத்து மற்றும் திறப்பு 90 கன அடி. இருப்பு 457 மி.கன அடி. சோத்துப்பாறை அணையின் நீர் மட்டம் முழு கொள்ளளவை எட்டி 126.47 அடியில் உள்ளது. இதனால் அணைக்கு வரும் 93 கன அடி முழுவதும் வெளியேற்றப்பட்டு வருகிறது. நீர் இருப்பு 100 மி.கன அடியாக உள்ளது.

    பெரியகுளம் அருகே உள்ள கும்பக்கரை அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக கடந்த மாதம் 3 ஆம் தேதி முதல் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அன்று முதல் சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி வனத்துறையினர் குளிக்க தடைவித்தனர். இந்நிலையில் கடந்த 15 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளான மேற்கு தொடர்ச்சி மலை பகுதி, வட்டக்கானல் மற்றும் வெள்ளக்கவி பகுதிகளில் மழை பொழிவு முற்றிலும் இல்லாமல் காணப்பட்டது. இருந்தபோதும் அருவிக்கு வரும் நீர் வரத்து சற்று குறைந்து வந்தது. கடந்த 3 நாட்களாக அருவியின் நீர் பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழையால் தொடர்ந்து அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. எனவே சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பு கருதி குளிக்க விதிக்கப்பட்ட தடை இன்று 42-வது நாளாக தொடர்வதாக தேவதானப்பட்டி வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.

    Next Story
    ×