search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    60 வயதை கடந்த ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய் ராசா... மருத்துவ படிப்பில் சேர்ந்த மகனுக்கு அறிவுரை வழங்கிய ஏழைத்தாய்
    X

    மகனுக்கு மருத்துவம் படிக்க இடம் கிடைத்ததும் கைகூப்பி கடவுளுக்கு நன்றி சொன்ன ஏழைத்தாய்

    60 வயதை கடந்த ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் செய் ராசா... மருத்துவ படிப்பில் சேர்ந்த மகனுக்கு அறிவுரை வழங்கிய ஏழைத்தாய்

    • அரசு பள்ளிகளில் படித்து ‘நீட்’ தேர்வு எழுதி 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.
    • விவசாய கூலித் தொழிலாளின் மகன் கார்த்திகேயன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.

    சென்னை:

    பிள்ளைக்கு டாக்டர் சீட் வாங்க போறோம்... என்று ஊரில் இருந்து கிளம்புபவர்கள். கார் அல்லது ரெயிலில் பயணித்து சென்னையில் நல்ல ஓட்டலாக பார்த்து ரூம் போட்டு குளித்து மாற்று உடை உடுத்திக் கொண்டு பிரஷ்ஷாகி அட்மிஷன் வாங்க புறப்படுவார்கள்.

    கீழ்ப்பாக்கத்தில் உள்ள மருத்துவ கல்வி இயக்குனரகம் கார்களால் நிரம்பி இருக்கும். இடமில்லாமல் ரோட்டிலும் கார்கள் அணிவகுத்து நிற்கும்.

    கோட்-சூட் அணிந்தும், விலை உயர்ந்த புடவையிலும் பெற்றோருடன் பிள்ளைகள் வந்து குவிந்து இருப்பார்கள். அவர்களின் மிடுக்கான தோற்றமே டாக்டர், என்ஜினீயர், தொழில் அதிபர், வசதி படைத்த குடும்பத்தினர் என்பதை வெளிப்படுத்தும். இதைத்தான் கீழ்ப்பாக்கம் வளாகம் பார்த்து இருக்கிறது.

    ஆனால் இன்று புதுமையானவர்களை-உண்மையான உழைப்பாளிகளை அந்த வளாகம் விசித்திரமாக பார்த்தது.

    ஊரில் நாள் முழுவதும் சகதி நிறைந்த கந்தல் ஆடையுடன் விவசாய நிலத்தில் பாடுபடும் விவசாயிகள், கல், மண் சுமக்கும் தொழிலாளர்கள், இடுப்பில் துண்டு மட்டும் கட்டிக்கொண்டு தறிக் குழிக்குள் நின்று துணி நெய்யும் நெசவாளிகள், இவர்களின் பிள்ளைகளும் அரசு பள்ளிகளில் படித்து 'நீட்' தேர்வு எழுதி அரசின் 7.5 சதவீத இட ஒதுக்கீட்டின்கீழ் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்து இருக்கிறது.


    மருத்துவ கலந்தாய்வுக்கு வந்த நெசவு தொழிலாளி மகள் சங்கீதா

    கிராமங்களில் இருந்து தாய்-தந்தையுடன் பஸ்சில் கோயம்பேடு வந்து இறங்கி அங்கிருந்து டவுன் பஸ்சை பிடித்து வந்திருந்தார்கள். கைகளில் சிறிய பை. கசங்கிய வேட்டி-சட்டையில் தந்தை, கசங்கிப்போன பழைய சேலையில் தாய், சாதாரண பேன்ட் சட்டையில் மகன், பொதுக்குழாயில் பல் துலக்கி முகத்தை கழுவி விட்டு கையேந்தி பவனில் ஒன்றிரண்டு இட்லியை வாங்கி சாப்பிட்டுக் கொண்டு மர நிழல்களில் அமர்ந்திருந்தார்கள்.

    சென்னையின் கம்பீரம் அவர்களின் கண்களை கவர்ந்தது. நாகரீகம் அவர்களை ஆச்சரிய மூட்டியது.

    பார் பார் பட்டணம் பார் என்று ஒவ்வொன்றையும் ஆச்சரியத்துடன் பார்த்தார்கள். இனி இந்த மாதிரி பட்டணத்தில் தான் நம் பிள்ளையும் படிக்கப்போகிறான் என்ற சந்தோசம் அவர்களின் முகங்களில் தெரிந்தது.

    கவுன்சிலிங் முறை வந்து மகனை உள்ளே அழைத்ததும் தாய் அல்லது தந்தை யாராவது ஒருவர் உடன் சென்றார்கள்.

    அங்கு மாணவனை அமர வைத்து கம்ப்யூட்டர் திரையில் கல்லூரிகளின் விபரத்தை காட்டினார்கள். ஆனால் எதுவும் தெரியாமல் பார்த்து கொண்டிருந்த தந்தையிடம் மருத்துவ துறை பணியாளர்கள் அய்யா, உங்கள் பகுதியில் இன்னென்ன கல்லூரிகளில் இடம் உள்ளது. எந்த கல்லூரி வேண்டும் என்று கேட்டனர்.

    அதைகேட்ட பெற்றோர் தங்கள் மகனிடம் 'அய்யா உனக்கு எந்த காலேஜ் புடிக்குதோ அதை எடுய்யா' என்றனர்.

    அத்துடன் அந்த ஊழியர்களிடம் "நல்ல காலேஜா பார்த்து குடுங்கய்யா" என்றும் கேட்டுக் கொண்டனர். இதுதான் ஒரு கிராமத்து தொழிலாளி வீட்டு டாக்டர் கனவு பலித்த காட்சி.

    அரியலூரை சேர்ந்த விவசாய கூலித் தொழிலாளர்கள் பழனியாண்டி-மகேஸ்வரி தம்பதியின் மகன் கார்த்திகேயன் திண்டுக்கல் அரசு மருத்துவ கல்லூரியை தேர்வு செய்தார்.

    மகனுக்கு டாக்டருக்கு படிக்க இடம் கிடைத்து விட்டது என்றதும் அந்த ஏழைத்தாய் இரு கைகளையும் கூப்பிய படியே 'சாமி, என் புள்ளக்கி நல்ல வழி காட்டிவிட்டாய்' என்று கூறியதும் கண்களில் இருந்து கண்ணீர் வந்தது.

    என் மகனும் டாக்டருக்கு படிப்பான் என்று நான் கனவில்கூட நினைக்கவில்லை. ஒதுக்கீட்டில் கண்டிப்பாக இடம் கிடைக்கும் என்று நம்பிக்கையோடு சொன்னான். அப்படியே நடந்து விட்டது என்றார்.

    மேலும் கார்த்திகேயனின் கன்னங்களை தடவியபடியே 'நல்லா படிக்கணும்யா. நீ டாக்டர் ஆகி என்னைப் போல் 60 வயதை கடந்த ஏழைகளுக்கு இலவசமாக வைத்தியம் பார்க்கணும்யா' என்றார்.

    அந்த ஏழைத்தாயின் விருப்பத்தை கேட்டதும் அங்கு நின்றவர்கள் ஆச்சரியப்பட்டார்கள்.

    அந்தியூரை சேர்ந்த நெசவுத்தொழிலாளியின் மகளான சங்கீதா கூறும்போது, "என் அம்மா-அப்பாவுக்கு நான் டாக்டராக வேண்டும் என்று ஆசை. ஆனாலும் நீட் தேர்வில் சாதிக்க முடியுமா என்று பயமாக இருந்தது. இப்போது அரசின் ஒதுக்கீடு மூலம் இடம் கிடைத்ததால் எங்கள் குடும்பமே கர்வம் கொள்கிறது" என்றார்.

    Next Story
    ×