search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கைது
    X

    போலீஸ்காரர் ஸ்ரீதர்.

    போதைப்பொருள் கடத்தல் கும்பலுக்கு மூளையாக செயல்பட்ட போலீஸ்காரர் கைது

    • பதுங்கி இருந்த சுஜிமோகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர்.
    • போதை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் ஸ்ரீதரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.

    கோவை:

    கோவை மாநகரில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க போலீசார் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இளைஞர்கள், கல்லூரி மாணவர்களை குறி வைத்து போதைபொருட்களை விற்பனை செய்யும் கும்பலை போலீசார் கைது செய்து வருகின்றனர்.

    இந்நிலையில் ரத்தினபுரி போலீஸ் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் போதைப்பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்த கும்பல் தலைவன் சுஜிமோகன் உள்பட 7 பேரை போலீசார் தேடி வந்தனர். போலீசார் தேடுவதை அறிந்த அவர்கள் தலைமறைவாக இருந்தனர். விசாரணையில் போதை கும்பல் பெங்களூரில் பதுங்கி இருப்பது தெரியவந்தது.

    இதனையடுத்து உதவி கமிஷனர் கணேசன் தலைமையில் இன்ஸ்பெக்டர் ராஜ்குமார் உள்ளிட்ட போலீசார் பெங்களூருக்கு சென்றனர். அங்கு பதுங்கி இருந்த சுஜிமோகன் உள்பட 7 பேரை போலீசார் கைது செய்தனர். அப்போது அவர்களிடம் இருந்து 50 கிராம் மெத்தபெட்டமின் எனப்படும் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். பின்னர் கோவைக்கு அழைத்து வந்து சுஜிமோகன் உள்பட 7 பேரையும் மத்திய ஜெயிலில் அடைத்தனர்.

    7 பேரின் செல்போன்களை போலீசார் ஆய்வு செய்த போது அதில் வாட்ஸ்அப் அழைப்பு மூலமாக ஒருவர் பல முறை பேசியது கண்டுப்பிடிக்கப்பட்டது. அந்த நபர் பேசிய 30-க்கும் மேற்பட்ட ஆடியோக்கள் இருந்தது. அந்த ஆடியோவில் போதைப்பொருளை போலீசிடம் சிக்காமல் எப்படி விற்பனை செய்வது, அவர்களிடம் இருந்து எப்படி தப்பிப்பது என்பது குறித்த தகவல்கள் இடம்பெற்றிருந்தது. போலீசார் யார் யாரை, எங்கெல்லாம் தேடுகிறார்கள் என்ற தகவல்களும் இருந்தது.

    இவ்வாறு போதை கும்பலுக்கு தகவல்கள் தெரிவித்து அவர்களுக்கு வழிகாட்டிபோல் இருந்தது ஒரு போலீஸ்காரர் என்பது கண்டுபிடிக்கப்பட்டது. அவர் சுந்தராபுரம் அஷ்டலட்சுமி நகரை சேர்ந்த அப்புசாமி என்பவரது மகன் ஸ்ரீதர் (வயது 24) என்பதும், கோவை ரேஸ்கோர்ஸ் போலீஸ் நிலையத்தில் போலீஸ்காரராக பணியாற்றி வந்ததும் தெரியவந்தது. போதை கும்பலுடன் தொடர்பில் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதால் ஸ்ரீதரை நேற்று நள்ளிரவு போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இந்த கும்பலுக்கு போதைப்பொருள் விற்பனையில் கிடைக்கும் பணத்தை பங்கு போட்டு பிரித்து கொடுத்து வந்த போத்தனூர் அங்காளம்மன் கோவில் வீதியை சேர்ந்த வக்கீல் ஆசிக் (24) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து 2 பேரிடமும் போலீசார் சரவணம்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    Next Story
    ×