search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    குமரியில் மழை நீடிப்பு- பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் ஒரே நாளில் 1½ அடி உயர்ந்தது

    • குமரி மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 708 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.
    • பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள்.

    நாகர்கோவில்:

    குமரி மாவட்டம் முழுவதும் இன்று 5-வது நாளாக மழை நீடிக்கிறது.

    மாவட்டம் முழுவதும் பெய்து வரும் மழையின் காரணமாக குளுகுளு சீசன் நிலவுகிறது. இன்று காலையிலும் மாவட்டம் முழுவதும் பரவலாக மழை பெய்தது. நாகர்கோவிலில் இன்று காலையில் வானத்தில் கருமேகங்கள் திரண்டு மப்பு மந்தாரமாக காணப்பட்டது. அவ்வப்போது சாரல் மழை பெய்தது. காலையில் பெய்த சாரல் மழையின் காரணமாக பள்ளிக்கு வந்த மாணவ-மாணவிகள் குடை பிடித்தபடி பள்ளிக்கு வந்தனர்.

    பூதப்பாண்டி, சுருளோடு, கன்னிமார், ஆரல்வாய் மொழி, மயிலாடி, இரணியல், குருந்தன்கோடு, கோழிப்போர் விளை, முள்ளங்கினாவிளை பகுதிகளிலும் மழை விட்டுவிட்டு பெய்துகொண்டே இருக்கிறது.

    திற்பரப்பு அருவி பகுதியில் விட்டுவிட்டு பெய்து வரும் மழையின் காரணமாக அங்கு ரம்மியமான சூழல் நிலவுகிறது. அருவிகளில் வெள்ளம் ஆர்ப்பரித்து கொட்டி வருவதால் அருவியில் குளிப்பதற்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் மற்றும் மலையோர பகுதியான பாலமோர் பகுதியில் பெய்து வரும் மழையின் காரணமாக பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு வரக்கூடிய நீர்வரத்து கணிசமான அளவு உயர்ந்துள்ளது. பெருஞ்சாணியில் அதிகபட்சமாக 26.6 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது.

    பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் நேற்று ஒரே நாளில் தலா 1½ அடி உயர்த்துள்ளது. பேச்சிப்பாறை அணை நீர்மட்டம் இன்று காலை 40.50 அடியாக இருந்தது. அணைக்கு 2129 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து 253 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

    பெருஞ்சாணி அணை நீர்மட்டம் 65.85 அடியாக உள்ளது. அணைக்கு 1591 கிரேடு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகள் நீர்மட்டம் உயர்ந்து வருவதால் பொதுப்பணித்துறை அதிகாரிகள் 24 மணி நேரமும் அணையை கண்காணித்து வருகிறார்கள்.

    சிற்றாறு-1 அணையின் நீர்மட்டம் 12.60 அடியாகவும், சிற்றாறு-2 அணையின் நீர்மட்டம் 12.69 அடியாகவும் உள்ளது. சிற்றாறு அணைகளின் நீர்மட்டம் 12 அடியை கடந்ததையடுத்து அணையின் கரையோர பகுதி மக்களுக்கும் ஆற்றின் கரையோரப் பொதுமக்களுக்கும் வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டு உள்ளது.

    பொதுமக்கள் அனைவரும் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறார்கள்.

    குமரி மாவட்டத்தில் ஜனவரி மாதம் முதல் இன்று வரை 708 மில்லி மீட்டர் மழை பதிவாகியுள்ளது. இயல்பாக இந்த மாதங்களில் 651.2 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்க வேண்டும் ஆனால் இந்த ஆண்டு இயல்பான மழையை காட்டிலும் கூடுதலான அளவு மழை பதிவாகியுள்ளது. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும்போது இந்த ஆண்டு குறைவான அளவில் மழை பதிவாகியுள்ளது.

    கடந்த ஆண்டு 8 மாதங்களில் 1233 மில்லி மீட்டர் மழை பெய்திருந்தது. கடந்த ஆண்டு ஒப்பிடும்போது இந்த ஆண்டு பிப்ரவரி, ஏப்ரல், ஆகஸ்டு மாதங்களில் மட்டுமே கூடுதலாக மழை கொட்டி தீர்த்து உள்ளது. இந்த ஆண்டு ஜனவரி மாதத்தில் 2.16 மில்லி மீட்டர் மழையும், பிப்ரவரி மாதத்தில் 48.23 மில்லி மீட்டர் மழையும், மார்ச் மாதத்தில் 21.02 மில்லி மீட்டர் மழையும், ஏப்ரல் மாதத்தில் 224.25 மில்லி மீட்டர் மழையும், மே மாதத்தில் 191.98 மில்லி மீட்டர் மழையும் பெய்துள்ளது.

    ஜூன் மாதத்தில் 51.75 மில்லி மீட்டர் மழையும், ஜூலை மாதத்தில் 84.55 மில்லி மீட்டர் மழையும், ஆகஸ்டு மாதம் நேற்று வரை 84.46 மில்லி மீட்டர் மழை பெய்துள்ளது.

    Next Story
    ×