search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி-மின்னலுடன் கனமழை
    X

    நெல்லை, தென்காசி, தூத்துக்குடியில் இடி-மின்னலுடன் கனமழை

    • அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் சாரல் மழை பெய்தது.
    • கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    நெல்லை:

    நெல்லை மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நேற்று பகலில் வானம் மேகமூட்டமாக காட்சியளித்தது. தொடர்ந்து மாலையில் வானில் மேகக்கூட்டங்கள் திரண்டு பரவலாக மழை பெய்ய தொடங்கியது. மணிமுத்தாறு அணையின் நீர்பிடிப்பு பகுதியில் சுமார் 1 மணி நேரம் கனமழை பெய்தது. அங்கு 2.6 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது.

    பிரதான அணையான பாபநாசம் அணை பகுதியில் நேற்று மழை பெய்யவில்லை. அந்த அணையில் 115.20 அடி நீர் இருப்பு உள்ளது. அணையில் இருந்து கார் பாசனத்திற்காக 1154 கனஅடி நீர் திறக்கப்பட்டு வருகிறது. அணைக்கு வினாடிக்கு 474 கனஅடி நீர் வந்த கொண்டிருக்கிறது.

    மாவட்டத்தில் சேரன்மகாதேவி, முக்கூடல், மூலைக்கரைப்பட்டி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மதியத்திற்கு பிறகு கனமழை பெய்தது. அதிகபட்சமாக சேரன்மகா தேவியில் 21 மில்லி மீட்டரும், மூலக்கரைப்பட்டியில் 20 மில்லிமீட்டரும் மழை பெய்துள்ளது. அம்பை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மாலையில் பெய்த மழையால் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வருகிறது.

    கன்னடியன் கால்வாய் பகுதியில் 8 மில்லிமீட்டரும், நாங்குநேரியில் 3 மில்லிமீட்டரும் மழை பெய்தது. நேற்று மாவட்டம் முழுவதும் பகலில் கடும் வெயில் வாட்டி வதைத்து வந்த நிலையில், திடீரென பெய்த மழை காரணமாக பொதுமக்களும், விவசாயிகளும் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மாநகரில் நேற்று மாலை 3 மணி அளவில் வானில் கருமேகக்கூட்டங்கள் திரண்டன.

    தென்காசி மாவட்டத்தில் மேற்கு தொடர்ச்சி மலையடி வார பகுதியில் அமைந்துள்ள கருப்பாநதி, குண்டாறு, அடவிநயினார் அணைகளின் நீர்பிடிப்பு பகுதிகளில் நேற்று திடீரென சாரல் மழை பெய்தது. தென்காசி நகர் பகுதியில் 1.10 மில்லிமீட்டர் மழை பதிவாகியது.

    சங்கரன்கோவில் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பிற்பகலில் பரவலாக மழை பெய்தது. அங்கு 13 மில்லிமீட்டர் மழை பதிவாகி உள்ளது. திடீர் மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.

    சிவகிரி, வாசுதேவநல்லூர் பகுதியில் நேற்று மாலை 3 மணிக்கு பிறகு திடீரென மழை பெய்தது. இரவு 8 மணி வரையிலும் பெய்த கனமழையால், மழை நீர் செல்ல முடியாத நிலையில் சாக்கடை நீருடன் கலந்து வெள்ளமாக ஓடியது. அங்குள்ள கீழரதவீதி, வலம்புரி விநாயகர் கோவில் ரோடு சந்திக்கும் தேரடி நிலையம் பகுதியில் மழைநீர் தேங்கி போக்குவரத்துக்கு இடையூறாக காணப்பட்டது.

    தூத்துக்குடி மாவட்டத்தில் பகலில் கடுமையான வெயில் அடித்த நிலையில் பிற்பகலில் பல்வேறு இடங்களிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. கயத்தாறு, கடம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் பெய்த கனமழை காரணமாக பெரும்பாலான இடங்களில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.

    மாலை 4 மணிக்கு மேல் கோவில்பட்டி பகுதியில் 2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த கனமழையால் இளையரசனேந்தல் பகுதியில் ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் குளம்போல் தேங்கியது. இதனால் அந்த வழியாக வந்த வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்பட்டன. கழுகுமலை பகுதியில் 2 மணி நேரம் பெய்த மழையால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர். இதனால் அங்கு மழை நிற்கும் வரை மின்தடை ஏற்பட்டது.

    Next Story
    ×