search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை
    X

    ஆசனூர் அருகே குடியிருப்பு பகுதியில் சுற்றிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை

    • வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை கிராமத்துக்குள் அதிகாலையில் நுழைந்தது.
    • அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை.

    தாளவாடி:

    ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஏராளமான சிறுத்தை, புலி, யானை உள்ளிட்ட வனவிலங்குகள் வசித்து வருகின்றன.

    இந்நிலையில் வனப்பகுதியில் இருந்து வெளியேறும் சிறுத்தை, புலி அடிக்கடி வனப்பகுதியையொட்டி அமைந்துள்ள கிராமங்களுக்குள் நுழைந்து கால்நடைகளை வேட்டையாடி வருகிறது. சில நேரங்களில் மனிதர்களையும் வனவிலங்குகள் தாக்கி வருகிறது.

    ஆசனூர் அருகே உள்ளது பங்களாதொட்டி கிராமம். இந்த கிராமத்துக்கு வனப்பகுதியில் இருந்து வெளியே வந்த ஒரு சிறுத்தை அதிகாலையில் நுழைந்தது. பின்னர் அந்த சிறுத்தை குடியிருப்பு பகுதிகளை சுற்றி சுற்றி வந்தது.

    அதிகாலை நேரம் என்பதால் பொதுமக்கள் நடமாட்டம் இல்லை. மேலும் கால்நடைகளும் வெளியே இல்லை. இதனால் ஊருக்குள் நுழைந்த சிறுத்தை ஏமாற்றத்துடன் மீண்டும் வனப்பகுதிக்குள் திரும்பியது.

    சிறுத்தை ஊருக்குள் வந்து சென்ற காட்சி அங்குள்ள ஆரோக்கியசாமி என்பவரது கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்தது. இதுபற்றி தெரிய வந்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். மேலும் வனத்துறையினரும் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

    அதிகாலை நேரத்தில் வந்து சென்ற சிறுத்தை இரவு நேரத்தில் மீண்டும் ஊருக்குள் வரும் வாய்ப்பு உள்ளது. எனவே இரவு நேரத்தில் பொதுமக்கள் வெளியே வராமல் எச்சரிக்கையாக இருக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறது. மேலும் ஊருக்குள் நுழைந்த சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    அதிகாலை நேரத்தில் ஊருக்குள் சிறுத்தை வந்து சென்ற சம்பவம் கிராம மக்களிடையே பீதியை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×