search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 59 எம்.பி.பி.எஸ். உள்பட 483 இடங்கள் காலி
    X

    தமிழகத்தில் அரசு மருத்துவக்கல்லூரிகளில் 59 எம்.பி.பி.எஸ். உள்பட 483 இடங்கள் காலி

    • தமிழகத்தில் மட்டும் 483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன.
    • புதுச்சேரியில் 162 இடங்களும், மகாராஷ்டிராவில் 154 இடங்களும், ராஜஸ்தானில் 121 இடங்களும், கர்நாடகாவில் 118 இடங்களும் காலியாக உள்ளன.

    சென்னை:

    தமிழ்நாட்டில் அரசு மற்றும் தனியார் சுயநிதி மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். இடங்கள் ஆன்லைன் கலந்தாய்வு மூலம் நிரப்பப்படுகின்றன. 3 கட்ட கலந்தாய்வு முடிந்து தற்போது இறுதி சுற்று நடைபெற்று வருகிறது.

    மாநில அரசின் எம்.பி.பி.எஸ். ஒதுக்கீட்டு இடங்கள் அனைத்தும் நிரம்பி விட்டன. வெளிநாடு வாழ் தமிழர்களுக்கான இடங்களில் சேராமல் காலாவதியாகும் 34 இடங்களுக்கு இறுதி சுற்று கலந்தாய்வு இன்று நடக்கிறது. இதற்கான விவரங்கள் மருத்துவ கல்வி இணைய தளத்தில் வெளியிடப்பட்டு உள்ளது.

    சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவுப்படி வருகிற 30-ந்தேதிக்குள் கலந்தாய்வு முடிக்கப்பட வேண்டும்.

    இந்த நிலையில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்களுக்கும் மத்திய மருத்துவ குழு 3 கட்டமாக கலந்தாய்வை நடத்தி முடித்துள்ளது. இதில் நாடு முழுவதும் 1640 எம்.பி.பி.எஸ். இடங்கள் காலியாக உள்ளன. அதில் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் 872 ஆகும்.

    தமிழகத்தில் மட்டும் 483 எம்.பி.பி.எஸ். இடங்கள் உள்ளன. அரசு மருத்துவ கல்லூரிகளில் உள்ள 59 அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நிரம்பாமல் உள்ளன. மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில் 1 டஜன் இடங்கள் நிரம்பவில்லை.

    அகில இந்திய அளவில் காலியாக உள்ள இடங்களை வருகிற 30-ந்தேதிக்குள் திரும்ப பெற வேண்டும் அல்லது சேர்க்கைக்கான காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என்று மத்திய அரசை தனியார் கல்வி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

    மேலும் தனியார் கல்வி நிறுவனங்கள் கட்-ஆப் மதிப்பெண்களை 30 வரை குறைக்க மத்திய அரசிடம் வற்புறுத்தி வருகின்றன.

    இதுகுறித்து மருத்துவ கல்வி பயிற்சி நிறுவனத்தின் மூத்த ஆலோசகர் ஒருவர் கூறியதாவது:-

    அகில இந்திய ஒதுக்கீடு இடங்கள் 872, எய்ம்ஸ், ஜிப்மர், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம் போன்ற மத்திய கல்வி நிறுவனங்களில் 44 இடங்கள் காலியாக உள்ளன. காலியாக உள்ள இடங்களை ஒப்பிடுகையில் ஐந்தில் இரண்டு பங்கு இடங்கள் மட்டுமே நிகர்நிலை பல்கலைக்கழகங்களில் உள்ளவை. மேலும் 44 இடங்கள் என்.ஆர்.ஐ. பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டு நிரப்பப்படாமல் உள்ளன.

    கிட்டதட்ட 50 சதவீத காலி இடங்கள் அரசு கல்லூரிகளில் உள்ளன. முந்தைய சுற்றுகளில் சீட் ஒதுக்கப்பட்ட மாணவர்களுக்கு "இலவச வெளியேறுதல்" மற்றும் ஒத்திவைக்கப்படாத கவுன்சிலிங் செயல்முறை ஆகியவற்றால் காலி இடங்கள் அதிகளவில் உருவாகி உள்ளன.

    புதுச்சேரியில் 162 இடங்களும், மகாராஷ்டிராவில் 154 இடங்களும், ராஜஸ்தானில் 121 இடங்களும், கர்நாடகாவில் 118 இடங்களும் காலியாக உள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    மாணவர்கள் இந்த கல்லூரிகளில் இடங்களை தேர்வு செய்யாவிட்டால் அல்லது அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட இடங்கள் உள்ள கல்லூரிகளில் சேரவில்லை என்றால் இந்த உயர் தேவை இடங்கள் காலியானதாக அறிவிக்கப்படும்.

    மத்திய மற்றும் மாநில கலந்தாய்வில் இடங்கள் தடைபடுவதை தவிர்க்க மாநிலங்கள் கலப்பின கவுன்சிலிங்கிற்கு செல்ல வேண்டும் என்று பெற்றோர்களும், மாணவர்களும் கூறுகின்றனர்.

    Next Story
    ×