search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    1000 இடங்களில் 15-ந்தேதி மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்
    X

    1000 இடங்களில் 15-ந்தேதி மருத்துவ முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன்

    • டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.
    • கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன.

    சென்னை:

    சென்னை சைதாப்பேட்டை தொழிலாளர் காலனியில் இன்று நடைபெற்ற மருத்துவ முகாமை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக சுகாதாரத்துறை தயார் நிலையில் உள்ளது. தற்போது காய்ச்சல் பாதிப்பு அதிகமாக உள்ள இடங்களில் மருத்துவ முகாம்களை நடத்தி வருகிறோம். வருகிற 15-ந்தேதி தமிழகம் முழுவதும் 1000 மருத்துவ முகாம்கள் நடத்தப்பட உள்ளது.

    சென்னையில் 100 இடங்களிலும், மற்ற மாவட்டங்களில் 900 இடங்களிலும் இந்த முகாம்கள் நடத்தப்படுகிறது. முதலமைச்சரால் தொடங்கி வைக்கப்பட்ட மக்களை தேடி மருத்துவ முகாம் திட்டம் 1 கோடி பேரை சென்றடைய இலக்கு நிர்ணயிக்கப்பட்டு இருந்தது.

    ஆனால் 2 கோடி பேர் வரையில் பயனடைந்துள்ளனர். இதுவரை 1 கோடியே 96 லட்சத்து 77,577 பேர் பயன் அடைந்திருக்கிறார்கள். இதன் மூலம் ஐ.நா.சபையின் பாராட்டையும் பெற்றுள்ளோம். டெங்கு காய்ச்சலை தடுப்பதற்கு பொதுமக்களும் முழுமையாக ஒத்துழைப்பை அளிக்க வேண்டும்.

    2012-ம் ஆண்டு 66 பேரும், 2013-ல் 65 பேரும் டெங்கு காய்ச்சலால் உயிரிழந்துள்ள நிலையில் கடந்த 3 ஆண்டுகளில் டெங்கு உயிரிழப்புகள் குறைந்து உள்ளன. இந்த ஆண்டு இதுவரையில் 7 பேர் மட்டுமே பலியாகி இருக்கிறார்கள்.

    தங்களது வீடுகளின் சுற்றுப்புறங்களில் மழைநீர் தேங்காமல் மக்கள் பார்த்துக்கொண்டாலே கொசு உற்பத்தி தடுக்கப்பட்டு விடும். எனவே பொதுமக்கள் இதில் கூடுதல் கவனத்துடன் செயல்பட வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×