search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் தேக்கத்துக்கு தீர்வு காண ரூ.15 கோடியில் கால்வாய் அமைக்க திட்டம்- அமைச்சர் தகவல்
    X

    கோயம்பேடு மார்க்கெட்டில் மழைநீர் தேக்கத்துக்கு தீர்வு காண ரூ.15 கோடியில் கால்வாய் அமைக்க திட்டம்- அமைச்சர் தகவல்

    • கால்வாய்கள் துரிதப்படுத்தி தூர்வார்கின்ற பணியை மேற்கொள்வதற்கும் துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.
    • போர்க்கால அடிப்படையில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டால் சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    சென்னை:

    அமைச்சர் பி.கே.சேகர் பாபு கோயம்பேடு வணிக வளாகத்தை இன்று ஆய்வு செய்தார். அதன் பிறகு அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

    கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடியில் பெருமழை வெள்ளத்தின் போது ஏற்படுகின்ற தண்ணீர் தேக்கத்திற்கு நிரந்தர தீர்வாக முதல் கட்டமாக 15 கோடி ரூபாய் செலவில் மழை நீர் கால்வாய் அமைப்பதற்கு உண்டான ஒப்பந்தங்கள் நிறைவுற்று பருவமழையை பொறுத்து அந்த பணிகள் ஆரம்பிக்கப்பட உள்ளது.

    அதேபோல் ஏற்கனவே இருக்கின்ற புதிதாக கட்டப்பட இருக்கின்ற கால்வாய்களை தவிர்த்து 850 மீட்டர் அளவிற்கு கோயம்பேடு மொத்த விற்பனை அங்காடி தொடங்குகிற போது கட்டப்பட்ட அந்த கால்வாயை மறுசீரமைக்க வேண்டும் என்று சட்டமன்ற பேரவை உறுப்பினர் கோரிக்கை வைத்திருக்கின்றார். அந்த பணிகளும் ஏற்றுக்கொள்ளப்படும்.

    தற்பொழுது மெட்ரோ ரெயில் பணிகள் நடைபெறுவதால் இந்த பகுதியில் பெய்கின்ற அவ்வப்போது மழைக்கு தண்ணீர் தேங்குகின்ற நிலை இருக்கின்றது முழுவதுமாக சி.எம்.ஆர்.எல். பணி நிறைவுறுவதற்கும் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் கட்டப்பட இருக்கின்ற 770 மீட்டர் அளவு குண்டான கால்வாய் பணிகளும் இந்த பருவமழைக்கு பிறகு தான் அவை முழுமையாக கட்டுமான பணி நிறைவு பெறுகின்ற சூழ்நிலை இருப்பதால் அந்த இடத்தில் இந்த மழைக்கு தேங்குகின்ற தண்ணீரை வெளியேற்றுவதற்காக சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்தின் சார்பில் 60 ஹெச்பி அளவிற்கு புதிதாக மோட்டார்கள் கொள்முதல் செய்யப்பட்டு இருக்கின்றன. அவைகளை உடனடியாக அந்தப் பகுதியில் நிறுவுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

    மழை தொடரும் என்று ஆரஞ்சு அலெர்ட் தந்திருக்கின்ற அந்த 14, 15, 16 போன்ற தேதிகளுக்கு கூடுதலாக உடல் உழைப்பு பணியாளர்களை நியமித்து அந்த கால்வாய்கள் துரிதப்படுத்தி தூர்வார்கின்ற பணியை மேற்கொள்வதற்கும் துறை சார்பில் உத்தரவிடப்பட்டு இருக்கின்றது.

    ஆகவே இந்த பெரு மழையை சமாளிப்பதற்கு தமிழக முதலமைச்சருடைய உத்தரவின் பேரில் நம்முடைய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் 3 முறை கலந்தாய்வு கூட்டங்களை நடத்தியிருக்கின்றார். அந்த வகையில் போர்க்கால அடிப்படையில் பெருமழை வெள்ளம் ஏற்பட்டால் சமாளிப்பதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×