search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- பரபரப்பு
    X

    மு.க.ஸ்டாலின் பயணித்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல்- பரபரப்பு

    • துபாய் சென்றடையும் வரை 4 மணி நேரம் அதிகாரிகள் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளனர்.
    • கடந்த 15 நாளில் மட்டும் விமான நிலைய மானேஜருக்கு 3 மெயில்களில் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தமிழ்நாட்டிற்கு தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக நேற்றிரவு அமெரிக்கா புறப்பட்டுச் சென்றார்.

    சென்னை விமான நிலையத்தில் இருந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானம் மூலம் துபாய் சென்று அங்கிருந்து வேறு விமானம் மூலம் அமெரிக்கா சென்றுள்ளார்.

    அங்கு அவர் 14-ந்தேதி வரை அதாவது 19 நாட்கள் அரசு முறை பயணம் மேற் கொள்கிறார். இன்றிரவு சான்பிரான்சிஸ்கோ சென்றடையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை அங்கு நடைபெறும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    31-ந்தேதி சான்பிரான்சிஸ்கோவில் புலம் பெயர்ந்த தமிழர்களை சந்தித்து பேச உள்ளார். இதைத் தொடர்ந்து அமெரிக்காவின் பல்வேறு முன்னணி நிறுவனங்களின் தலைவர்களை சந்தித்து பேச உள்ளார்.

    செப்டம்பர் மாதம் 2-ந் தேதி அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் இருந்து சிகாகோ செல்லும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தொடர்ந்து 12-ந்தேதி வரை தங்கி இருந்து பல்வேறு நிறுவனங்களின் சி.இ.ஓ.க்கள் மற்றும் தலைவர்கள் உள்ளிட்ட முதலீட்டாளர்களை சந்திக்கிறார். அங்கு 7-ந் தேதி அயலக தமிழர்களுடனும் கலந்துரையாடுகிறார்.

    இந்த நிலையில் சென்னையில் இருந்து முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயணித்த எமிரேட்ஸ் விமானத்திற்கு நேற்றிரவு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்ட தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

    அதாவது சென்னையில் இருந்து எமிரேட்ஸ் விமானத்தில் துபாய் சென்று அங்கிருந்து அமெரிக்கா செல்வதாக முதலமைச்சரின் பயணத்திட்டம் வகுக்கப்பட்டிருந்தது.

    அதன்படி முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரவு 8.40 மணிக்கே சென்னை விமான நிலையம் வந்து விட்டார். அங்கு அமைச்சர்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் அவரை வழியனுப்பி வைத்தனர்.

    அதன் பிறகு விமான நிலையத்திற்குள் சென்று அமர்ந்து இரவு 10.16 மணிக்கு புறப்பட்ட எமிரேட்ஸ் விமானத்தில் பயணம் செய்தார்.

    அதாவது இந்த விமானம் துபாயில் தரையிறங்கியதும் அங்கு இறங்கி வேறு விமானம் மூலம் அவர் அமெரிக்கா செல்ல வேண்டும்.

    இந்த நிலையில் சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பயணம் செய்த எமிரேட்ஸ் விமானம் பறந்து சென்று கொண்டிருந்த போது அந்த விமானத்திற்கு வெடிகுண்டு மிரட்டல் வந்ததை அறிந்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

    சென்னை விமான நிலைய டைரக்டருக்கு இ.மெயில் மூலம் (மின்னஞ்சல்) இரவு 7.55 மணிக்கே இந்த வெடிகுண்டு மிரட்டல் வந்து கிடந்துள்ளது. ஆனால் அதை யாரும் அப்போது பார்க்கவில்லை. இரவு 10 மணிக்கு மேல்தான் பார்த்துள்ளனர். அதன் பிறகு பதறியடித்து போலீசுக்கு தகவல் கொடுத்து உள்ளனர். ஆனால் அதற்குள் முதலமைச்சர் பயணம் செய்த எமிரேட்ஸ் விமானம் புறப்பட்டு சென்று விட்டது.

    இதனால் அதிகாலை துபாய் சென்றடையும் வரை 4 மணி நேரம் அதிகாரிகள் மிகவும் பதற்றத்துடன் இருந்துள்ளனர். இன்று அதிகாலையில் துபாயில் விமானம் தரையிறங்கிய பிறகு அதில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது தான் வெடிகுண்டு மிரட்டல் புரளி என தெரிய வந்தது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் துபாயில் இறங்கியதும் சில மணி நேரம் ஓய்வெடுத்த பிறகு அங்கிருந்து அமெரிக்கா புறப்பட்டு சென்றார்.

    வெடிகுண்டு மிரட்டலில் சென்னை விமான நிலையத்திற்கும் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டதால் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் மற்றும் மெட்டல் டிடெக்டர் கொண்டு பல இடங்களில் சோதனை நடத்தினார்கள். இந்த சோதனையில் அந்த மிரட்டல் புரளிதான் என தெரிய வந்தது.

    வெடிகுண்டு மிரட்டல் காரணமாக பாதுகாப்பு படையினர் சோதனை நடத்தியதால் பயணிகள் சற்று பதற்றம் அடைந்தனர்.

    கடந்த சில நாட்களாகவே விமான நிலையத்திற்கும், விமானங்களுக்கும் மிரட்டல் வந்த வண்ணம் உள்ளது. கடந்த 15 நாளில் மட்டும் விமான நிலைய மானேஜருக்கு 3 மெயில்களில் மிரட்டல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×