search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கோவையில் போலி பெயர்களில் தாக்குதலுக்கு சதி செய்த முபின்
    X

    முபின்

    கோவையில் போலி பெயர்களில் தாக்குதலுக்கு சதி செய்த முபின்

    • முபின் 2 செல்போன் மற்றும் 3 சிம்கார்டுகளையும் பயன்படுத்தி இருப்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர்.
    • கோவையில் 150 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவில் கண்காணித்து வந்தனர். அதில் முபினும் ஒருவர் ஆவார்.

    கோவை:

    கோவை கோட்டை மேட்டில் கடந்த 23-ந் தேதி நடந்த கார் வெடிப்பில் ஜமேஷா முபின்(29) என்ற வாலிபர் உயிரிழந்தார்.

    விசாரணையில் முபின் தனது கூட்டாளிகளுடன் கோவையில் பயங்கர நாச வேலைக்கு திட்டமிட்டது தெரியவந்தது. இது தொடர்பாக 6 பேர் கைது செய்யப்பட்டனர்.

    இந்த வழக்கில் 6-வது நபராக கைது செய்யப்பட்ட அப்சர்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு அதிர்ச்சிகரமான தகவல்கள் தெரியவந்துள்ளது. அதில் போலி பெயர்களில் முபின் கோவையில் தாக்குதலுக்கு சதி செய்ததும், 3 சிம்கார்டுகளை பயன்படுத்தியதும் கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

    கோவையில் தாக்குதலை நடத்த முடிவு செய்த முபின், அதற்கு தேவையான பொருட்களை ஒவ்வொன்றாக வாங்கியுள்ளார். அப்போது வெடிபொருட்களை வைப்பதற்காக டிரம்கள் தேவைப்பட்டுள்ளன.

    இதையடுத்து அவர், உக்கடம் லாரி பேட்டை பகுதிக்கு சென்று 3 இரும்பு கேன்களை வாங்கி உள்ளார்.

    அப்போது அங்கிருந்தவர்கள் பெயர் விவரங்களை கேட்கவே, அவர் தனது உண்மையான பெயரை மறைத்து விட்டு, அப்துல் ரகுமான் என பெயரை மாற்றி கூறியுள்ளார்.

    இதே போன்று போலி பெயர்களை கூறியே அவர் மற்ற பொருட்களையும் வாங்கி இருப்பது போலீஸ் விசாரணையில் தெரியவந்துள்ளது.

    சம்பவம் நடப்பதற்கு முந்தைய நாள் அதிகாலையில், முபின், அப்சர்கானுக்கு வாட்ஸ்-அப்பில் போன் செய்துள்ளார்.

    அப்போது தனக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளதாகவும், தனது வீட்டிற்கு உதவிக்கு வருமாறு கூறியுள்ளார். மீண்டும் போனில் தொடர்பு கொண்டு இதே தகவலை தெரிவித்து அப்சர்கானை வீட்டிற்கு அழைத்துள்ளார்.

    ஆனால் முதலில் வாட்ஸ்-அப் காலில் பேசியதால் முபின் அப்சர்கானுடன் பேசிய தகவலை கண்டுபிடிக்க முடியவில்லை. மீண்டும் அவன் சாதாரணமாக போனில் பேசியது, அப்சர்கானின் செல்போனில் பதிவாகி விட்டது.

    இது அப்சர்கானின் செல்போனை போலீசார் ஆய்வு செய்ததில் கண்டுபிடிக்கப்பட்டது.

    இதற்கிடையே கார் வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய ரியாஸ் தனது தாயாரிடம் பேசும் ஆடியோ மற்றும் பெரோஸ், ரியாசிடம் பேசும் ஆடியோக்களும் வெளியாகி உள்ளது.

    ரியாஸ் தனது தாயாரிடம் பேசும் ஆடியோவில், ரியாசிடம் அவரது தாயார் நீ எங்கு இருக்கிறாய்? வண்டி எங்கே என கேட்கிறார்? அதற்கு அவர் முபின் வீட்டை காலி செய்கிறான். அங்கு பொருட்களை எடுத்து வைத்து கொண்டிருக்கிறேன். வண்டியை மச்சானிடம் கொடுத்து விட்டதாக கூறுகிறார். எப்போது வருவாய் என்பதற்கு, சீக்கிரம் வந்து விடுவதாகவும் கூறியுள்ளார்.

    இதேபோல் ரியாசை தொடர்பு கொண்டு பேசும் பெரஸ், முபினின் வீட்டிற்கு வா பொருட்களை மாற்ற வேண்டும் என்ற தகவல்கள் பதிவாகி இருந்தன.

    இவர்கள் இதனை தாங்கள் மாட்டிகொண்டால் முபின் வீட்டை காலி செய்வதாகவும், அதற்கு தாங்கள் உதவ வந்தோம் என்பதை தெரிவிப்பதற்காகவே கைதானவர்கள் முன்கூட்டியே போனில் பேசி ரெக்கார்டு செய்ததும், பின்னர் அதனை வைத்து நாடகமாடி வெளியில் வந்து விடலாம் என்பதற்காக இந்த ஆடியோக்களை தயாரித்ததும் தெரியவந்தது.

    தற்போது இது தொடர்பான அனைத்து ஆதாரங்களும் போலீசிடம் சிக்கியுள்ளது.

    இந்த தகவல்கள் அனைத்தும் அப்சர்கானிடம் நடத்தப்பட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இறந்த முபின் 2 செல்போன் மற்றும் 3 சிம்கார்டுகளையும் பயன்படுத்தி இருப்பதையும் போலீசார் விசாரணையில் கண்டுபிடித்துள்ளனர். இதில் ஒரு போன் கார் வெடிப்பு சம்பவம் நடந்த இடத்தில் எரிந்து போனது.

    அவரது வீட்டில் சோதனை நடத்தியபோது மற்றொரு போன் சிக்கியது. அந்த போனில் ஏதாவது ஆதாரங்கள் இருக்கிறதா? என்பதை சேகரிக்கும் பணியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

    கோவையில் 150 பேரை சிறப்பு புலனாய்வு பிரிவில் கண்காணித்து வந்தனர். அதில் முபினும் ஒருவர் ஆவார். இதுகுறித்து போலீசார் கூறுகையில், கள்ளக்குறிச்சி சம்பவம் நடந்தபோது, ஜாதி, மதம் ரீதியான கலவரங்கள் ஏற்படலாம் என மத்திய உளவுத்துறையிடம் இருந்து தகவல் வந்தது. அதன்பேரில் சிறப்பு புலனாய்வு பிரிவான எஸ்.ஐ.சி., எஸ்.ஐ.யு. ஆகியவை கோவையில் மதம் சார்ந்த செயல்களில் ஈடுபடுவதாக 150 பேரை கண்டறிந்து கண்காணித்து வந்தனர். அதில் முபினும் ஒருவர். தொடர்ந்து அவர்களை கண்காணித்து வந்தோம்.

    மற்றபடி கார் வெடிப்பு சம்பவம் நடக்க போகிறது என்றோ, நாசவேலைக்கு திட்டமிட்டனர் என்ற தகவலோ மத்திய உளவுத்துறையிடம் இருந்து வரவில்லை என தெரிவித்தனர்.

    Next Story
    ×