search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முபின் இதயத்தை துளைத்து உயிரை பறித்த ஆணி- பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்
    X

    முபின் இதயத்தை துளைத்து உயிரை பறித்த ஆணி- பிரேத பரிசோதனையில் பரபரப்பு தகவல்

    • முபின் உடல் முழுவதும் 2 இன்ச் அளவுள்ள ஏராளமான ஆணிகள் குத்தியிருந்தன.
    • முபின் உடல் முற்றிலும் கருகாமல் இருந்துள்ளது. இதனால் காரை வெடிக்கச் செய்து அவர் தப்பிக்க முயன்று இருக்கலாம்.

    கோவை:

    கோவையில் பயங்கர நாசவேலைக்கு திட்டமிட்ட முபின் என்ற வாலிபர் கார் வெடித்து சிதறி பலியானார். தீபாவளிக்கு முந்தைய நாள் நிகழ்ந்த இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    முபின் பலியான கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பு அன்றைய தினமே தடயவியல் நிபுணர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஏராளமான ஆணிகள், கோலிக்குண்டுகள், பால்ரஸ் குண்டுகள் கைப்பற்றப்பட்டன. இதேபோல முபின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையிலும் கிலோ கணக்கில் வெடி பொருட்களும், ஆணிகளும் சிக்கின.

    கியாஸ் சிலிண்டர்கள், ஆணிகள், கோலிக்குண்டுகளை பயன்படுத்தி காரை வெடிக்கச் செய்து பெரும் சேதத்தை ஏற்படுத்த வேண்டும் என்பதே முபினின் திட்டமாக இருந்துள்ளது. தற்போது முபினின் உடல் பிரேத பரிசோதனை விவரங்களும் இதனை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

    முபின் உடலை கோவை அரசு ஆஸ்பத்திரியில் டாக்டர்கள் குழுவினர் பிரேத பரிசோதனை செய்தனர். அப்போது முபின் உடல் முழுவதும் 2 இன்ச் அளவுள்ள ஏராளமான ஆணிகள் குத்தியிருந்தன. அதில் ஒரு ஆணி இடதுபக்க மார்பில் பாய்ந்திருந்தது. அந்த ஆணி முபினின் இதயத்தை துளைத்திருந்தது. இதனாலேயே முபின் உடனடியாக அந்த இடத்திலேயே பலியாகி இருக்கிறார் என்ற விவரங்கள் பிரேத பரிசோதனையில் தெரியவந்திருக்கிறது.

    முபின் உடல் முற்றிலும் கருகாமல் இருந்துள்ளது. இதனால் காரை வெடிக்கச் செய்து அவர் தப்பிக்க முயன்று இருக்கலாம். ஆனால் காரில் அவர் வைத்திருந்த ஆணிகள் வெடித்து சிதறி அவருக்கே எமனாகி அவர் உடலையும், மார்பையும் துளைத்துள்ளது. இதில் தான் முபின் அந்த இடத்திலேயே உயிரிழந்துள்ள விவரமும் தெரியவந்துள்ளது.

    கார் அதிகாலை 4.03 மணிக்கு வெடித்துள்ளது. உடனடியாக கோவை தெற்கு தீயணைப்புத்துறைக்கு 4.06 மணிக்கு தகவல் சென்றுள்ளது. 4.08 மணிக்கு தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்றுள்ளனர். 4.20 மணிக்குள் தீ முற்றிலும் அணைக்கப்பட்டு விட்டது. அப்போது முபின் பிணமாகத்தான் அங்கிருந்து மீட்கப்பட்டார்.

    முபின் தற்கொலைப்படையாக செயல்பட்டாரா அல்லது சதிச்செயலுக்கு திட்டமிட்டு அவரே அந்த சதியில் சிக்கி இறந்தாரா? என்பது பற்றி விசாரணை நடந்து வரும் நிலையில் தற்போது வெளியாகி உள்ள பிரேத பரிசோதனை பெரும் திருப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×