search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சென்னையில் பூனையை தாக்கும் புதிய வைரஸ் நோய்
    X

    சென்னையில் பூனையை தாக்கும் புதிய வைரஸ் நோய்

    • வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் கொண்ட பூனைக்குட்டிகளுடன் கால்நடை மருத்துவமனைகளுக்கு அதிகமான பொதுமக்கள் வருகிறார்கள்.
    • வைரஸ் தாக்கும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பு ஏற்படுகிறது.

    சென்னையில் பூனையை தாக்கும் புதிய வைரஸ் நோய் பரவி வருகிறது. பெலைன் பார்வோ வைரஸ் எனப்படும் இந்த வைரஸ் பூனைகளை அதிக அளவில் தாக்கி வருகிறது. சென்னையில் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ள பூனைகள் அதிகரித்து வருகின்றன.

    சிறிய பூனைகள் மட்டுமின்றி அனைத்து வயது கொண்ட பூனைகளும் இந்த வைரஸ் தாக்குதலுக்கு உள்ளாகின்றன. இந்த வைரஸ் தாக்கிய பூனைகளுக்கு காய்ச்சல், ஆழ்ந்த மனச்சோர்வு மற்றும் பசியின்மை ஆகிய அறிகுறிகள் ஏற்படுகிறது. பல பூனைகளுக்கு வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது. சில பூனைகளுக்கு ரத்தக்கசிவுடன் வயிற்றுப்போக்கு ஏற்படுகிறது.

    இதுகுறித்து கால்நடை மருத்துவர்கள் கூறியதாவது:-

    பூனைகளை தாக்கும் பெலைன் பான்லூகோபீனியா அல்லது பெலைன் பார்வோ வைரஸ், தொற்றக்கூடிய வைரஸ் நோயாகும். இது பூனைகளை, குறிப்பாக பூனைக்குட்டிகளை பாதிக்கிறது. இந்த வைரஸ் தொற்று சென்னையில் அதிகரித்து வருகிறது. வைரஸ் நோய்த்தொற்றின் அறிகுறிகள் கொண்ட பூனைக்குட்டிகளுடன் கால்நடை மருத்துவமனைகளுக்கு அதிகமான பொதுமக்கள் வருகிறார்கள்.

    இந்த வைரஸ் தாக்கும் பூனைகளுக்கு சிகிச்சை அளிக்காவிட்டால் உயிரிழப்பும் ஏற்படுகிறது. மேலும் சிகிச்சை அளித்தாலும் 60 சதவீத பூனைகள் மட்டுமே சிகிச்சைக்கு பிறகு உயிர் பிழைக்கின்றன. தடுப்பூசி போட்டால் தான் பூனைக்குட்டிகளை காப்பாற்ற முடியும்.

    இந்த வைரஸ் எப்போதும் இருக்கும். ஆனால் குளிர்காலம் மற்றும் பருவமழைக்கு முன்பும், பின்பும் அதிகமாக பரவும். கடந்த 3 ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான நோய்த்தொற்றுடன் ஒப்பிடும்போது இந்த ஆண்டு நோய்த்தொற்று விகிதம் குறைவாக உள்ளது. அதிக அளவில் பூனைகள் இனப்பெருக்கம் மற்றும் பூனைகளுக்கு தடுப்பூசி போடாதது ஆகியவையே இந்த வைரஸ் தொற்றுக்கு காரணமாகும்.

    இந்த வைரஸ் பாதிப்பால் ஒவ்வொரு கால்நடை கிளீனிக்குகளுக்கும் தினமும் 5 முதல் 6 பூனைகள் கொண்டு வரப்படுகின்றன.

    பூனைகளுக்கு காய்ச்சல் இருக்கும்போது மருத்துவமனைக்கு உடனே கொண்டு சென்றால் உயிர் பிழைக்கும் விகிதம் அதிகமாக இருக்கும். தாமதமாக கொண்டு சென்றால் உயிருக்கு ஆபத்து ஏற்படும். இந்த வைரஸ் பாதிப்பு 3 முதல் 5 மாதம் வயது கொண்ட பூனைகளில் அதிகம் காணப்படுகிறது. இது தொற்றுநோயாக இருப்பதால், ஆரோக்கியமான பூனைகளை, வைரஸ் தாக்கிய பூனைகளிடம் இருந்து தனியாக வைக்க வேண்டும். இந்த வைரஸ் மனிதர்களை பாதிக்காது.

    பி.சி.ஆர். ஸ்னாப் பரிசோதனை மூலம் ஒன்றிரண்டு நிமிடங்களில் இந்த நோய்த்தொற்றை உறுதிப்படுத்த முடியும். அதைத்தொடர்ந்து ரத்த பரிசோதனைகள் செய்யப்பட வேண்டும்.

    காய்ச்சல் இருக்கும் பூனைக்குட்டிகளுக்கு பாராசிட்டமால் மாத்திரை கொடுக்கக்கூடாது. பூனைகள் பாராசிட்டமால் மாத்திரையில் உள்ள நச்சுத்தன்மைக்கு மிகவும் எளிதில் பாதிக்கப்படுகின்றன. இந்த நச்சுகள் அவற்றின் கல்லீரல் மற்றும் ரத்த அணுக்களை கடுமையாக சேதப்படுத்தி, ஆக்சிஜன் சுழற்சியை நிறுத்துகின்றன.

    இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.

    Next Story
    ×