search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    பெருந்துறை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து- டிரைவர் உள்பட 2 பேர் பலி
    X

    பெருந்துறை அருகே லாரி மீது ஆம்னி பஸ் மோதி விபத்து- டிரைவர் உள்பட 2 பேர் பலி

    • அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர்.
    • விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    ஈரோடு:

    சென்னையில் இருந்து நேற்று இரவு கோவை மாவட்டம் பொள்ளாச்சி நோக்கி தனியார் ஆம்னி பஸ் ஒன்று கிளம்பியது. காஞ்சிபுரம் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் (55) என்பவர் பஸ் டிரைவராக இருந்தார். கன்னியாகுமரி மாவட்டத்தை சேர்ந்த ஜோஸ்வா (21) என்பவர் பஸ் கண்டக்டராக இருந்தார். இந்த பஸ்சில் ஏராளமான பயணிகள் பயணம் செய்தனர்.

    ஆம்னி பஸ் இன்று காலை 5.45 மணி அளவில சேலம்-கோவை தேசிய நெடுஞ்சாலையில் பெருந்துறை ஸ்ரீ பிளஸ் மஹால் எதிரில் உள்ள மேம்பாலம் முன்பு சென்று கொண்டிருந்தது. அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது எதிர்பாராத விதமாக பயங்கர சத்தத்துடன் ஆம்னி பஸ் மோதியது. இந்த கோர விபத்தில் பஸ்சில் முன் பகுதி அப்பளம் போல் நொறுங்கியது.

    அதிகாலை என்பதால் பயணிகள் அனைவரும் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்தனர். இந்த விபத்தால் பஸ்சுக்குள் இருந்த பயணிகள் விபத்தில் சிக்கி மரண ஓலம் எழுப்பினர். இந்த விபத்தில் ஆம்னி பஸ் டிரைவர் பாலமுருகன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    மேலும் பஸ்சில் பயணம் செய்த கண்டக்டர் ஜோஸ்வா (21), திருப்பூர் மாவட்டம் பல்லடம் லட்சுமி நகரை சேர்ந்த ஜான்நேசன் (28), அவரது மனைவி ஜெனி (26), உடுமலையை சேர்ந்த ஸ்ரீவித்யா (23), ஊட்டி கூடலூரை சேர்ந்த டேவிட் ராஜ் (50), ஜான்சிமேரி (30), குருசம்மா (46), உமேஷ் (12), சென்னை சோலையூரை சேர்ந்த பூங்கொடி (45), திருப்பூரை சேர்ந்த ஆதர்ஷ் (26), ராமாயி (65), மனோஜ் (27) உள்பட 11 பயணிகளும் படுகாயம் அடைந்தனர்.

    இதனையடுத்து அந்த வழியாக சென்றவர்கள் விபத்து குறித்து பெருந்துறை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இதனையடுத்து பெருந்துறை போலீசார் மற்றும் 108 ஆம்புலன்ஸ் குழுவினர் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். பாலமுருகன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பெருந்துறையில் உள்ள மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்தில் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு சிகிச்சைக்காக பெருந்துறை மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் மிகவும் கவலைக்கிடமாக இருந்த திருப்பூர் மாவட்டம் பல்லடத்தை சேர்ந்த ஜான் நேசன் (28) என்பவர் ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லும் வழியில் பரிதாபமாக இறந்தார்.

    இதனால் இந்த விபத்தில் இறந்தவர்கள் எண்ணிக்கை 2 ஆக உயர்ந்தது. இந்த விபத்தில் ஜான் நேசன் மனைவி லேசான காயத்துடன் உயிர் தப்பியது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து குறித்து பெருந்துறை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×