search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஒதப்பை மேம்பாலப்பணி பருவமழைக்கு முன்பு முடிக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு
    X

    ஒதப்பை மேம்பாலப்பணி பருவமழைக்கு முன்பு முடிக்கப்படுமா?- பொதுமக்கள் எதிர்பார்ப்பு

    • கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது மொன்னவேடு-ராஜ பாளையம் தரைப்பாலம் பலத்த சேதமடைந்தது.
    • மழை காலத்திற்கு முன்பு இந்த மேம்பால பணியையும் முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    திருவள்ளூர் மாவட்டம், பூண்டி அருகே உள்ளது ஒதப்பை கிராமம். இந்த கிராமத்தில் திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில், கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே தரைப்பாலம் உள்ளது.

    சென்னையின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய ஏரிகளில் ஒன்றான பூண்டி ஏரி பருவமழை காலத்தில் நிரம்பும்போது உபரி நீர் கொசஸ்தலை ஆற்றில் திறந்து விடப்படும் இதில் வெள்ளம் கரைபுரண்டு ஓடும்போது ஒதப்பை தரைப்பாலம் தண்ணீரில் மூழ்குவது வழக்கமாக உள்ளது.

    பூண்டி ஏரியில் உபரி நீர் திறக்கப்படும் போதெல்லாம் பாதுகாப்பு கருதி வலுவிழந்த ஒதப்பை தரைப்பாலத்தில் போக்குவரத்து தடைசெய்யப்படும்.

    அவ்வாறு போக்குவரத்து தடை செய்யப்பட்டால் ஒதப்பை மற்றும் அதனை சுற்றியுள்ள சீத்தஞ்சேரி, மயிலாப்பூர், பென்னலூர்பேட்டை, தேவேந்தவாக்கம், பெருஞ்சேரி, அனந்தேரி உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் அதிக அளவில் பாதிக்கப்பட்டு வரும் நிலை உள்ளது. அவர்கள் மருத்துவம் உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு திருவள்ளூர் வந்து செல்ல சீத்தஞ்சேரி வனப்பகுதி வழியாக வெங்கல், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 30 கி.மீ., தூரம் சுற்றி செல்லும் சூழல் நிலவி வருகிறது.

    இதேபோல் நாகலாபுரம், சத்தியவேடு உள்ளிட்ட ஆந்திர மாநில பகுதிகள், ஊத்துக்கோட்டை பகுதியில் இருந்து திருவள்ளூருக்கு வரும் பொதுமக்கள், வாகன ஓட்டிகள், பெரியபாளையம், தாமரைப்பாக்கம் வழியாக சுமார் 40 கி.மீ., தூரத்துக்கு மேல் சுற்றிக்கொண்டு வரும்நிலை காணப்படுகிறது.

    எனவே ஒதப்பையில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்க வேண்டும் என்று சுற்றி உள்ள கிராம மக்கள் பல ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இதைத்தொடர்ந்து ஒதப்பையில் இருந்து திருவள்ளூர் மார்க்கமாக செல்லும் வகையில் ரூ.12.10 கோடி மதிப்பில் ஒரு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2019-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கப்பட்டது. இதேபோல் அருகில் ஊத்துக்கோட்டை மார்க்கமாக செல்லும் வகையில் சுமார் ரூ.13.89 கோடி மதிப்பில் மற்றொரு உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு நவம்பரில் தொடங்கியது.

    இந்த 2 உயர்மட்ட பால பணிகள் தொடங்கி 3½ ஆண்டுகள் ஆகியும் இன்னும் முடிவடையாமல் உள்ளது. பணிகள் ஆமை வேகத்தில் நடைபெற்று வருகிறது. வருகிற பருவமழைக்கு முன்னர் மேம்பால பணியை முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதைப்போல் மொன்னவேடு, ராஜபாளையம், எறையூர், மெய்யூர், கல்பட்டு, ஏனம்பாக்கம், ஆவாஜிபேட்டை, மாளந்தூர், செம்பேடு, மூலக்கரை உள்ளிட்ட 20-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்தவர்கள் மருத்துவம், கல்வி, பணி உள்ளிட்ட அத்தியாவசிய தேவைகளுக்கு மொன்னவேடு-ராஜபாளையம் இடையே கொசஸ்தலை ஆற்றில் உள்ள தரைப்பாலத்தை கடந்து திருவள்ளூர் மற்றும் சென்னை பகுதிகளுக்கு செல்ல வேண்டும்.

    கடந்த 2015-ம் ஆண்டு ஏற்பட்ட பெரு வெள்ளத்தின்போது மொன்னவேடு-ராஜபாளையம் தரைப்பாலம் பலத்த சேதமடைந்தது.

    இதையடுத்து அப்பகுதியில் கொசஸ்தலை ஆற்றின் குறுக்கே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணி கடந்த 2020-ம் ஆண்டு தொடங்கப்பட்டது.

    இந்த பணியும் தற்போது வரை முடிவடையாமல் நீடித்து வருகிறது. மழை காலத்திற்கு முன்பு இந்த மேம்பால பணியையும் முடிக்க வேண்டும் என்று கிராம மக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    இதுதொடர்பாக கிராம மக்கள் கூறியதாவது:-

    ஒதப்பை மேம்பாலம், மொன்னவேடு-ராஜபாளையம் கிராமங்களுக்கு இடையே மேம்பாலப்பணி தொடங்கப்பட்டு 3 ஆண்டுகளுக்கு மேல் ஆகியும் இன்னும் முடிவடையாமல் உள்ளது. பணிகள் மெத்தனமாக நடந்து வருவதால் மழைக்காலங்களில் பொதுமக்கள் பல்வேறு இன்னலுக்கு ஆளாகும் நிலை உள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இதே நிலையே காணப்படுகிறது. வடகிழக்கு பருவமழை தொடங்கும் முன்பு பணிகளை முடிவுக்கு கொண்டு வந்தால் மட்டுமே பூண்டி உபரி நீர் பெருக்கெடுக்கும்போது பொதுமக்களும், வாகன ஓட்டிகளும் சிரமம் இல்லாமல், திருவள்ளூர்- ஊத்துக்கோட்டை சாலையில் செல்லமுடியும். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேம்பால பணிகளை துரிதப்படுத்த வேண்டும்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    Next Story
    ×