search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பல்லடத்தில் 4 பேர் படுகொலை: முக்கிய குற்றவாளிகள் 2 பேர்  போலீசில் சரண்
    X

    சரணடைந்த கொலையாளிகள் சோனை முத்தையா, வெங்கடேசன்

    பல்லடத்தில் 4 பேர் படுகொலை: முக்கிய குற்றவாளிகள் 2 பேர் போலீசில் சரண்

    • ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
    • கொலையாளியான சோனை முத்தையா தேனியை சேர்ந்தவர் என்பதால் அங்கு போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர்.

    பல்லடம்:

    திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள கள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் செந்தில்குமார் (வயது 47). பருத்திக்கொட்டை வியாபாரம் செய்து வந்தார். இவரது சித்தப்பா பழனிசாமியின் மகன் மோகன்ராஜ் (45), மாதப்பூர் பஞ்சாயத்து பா.ஜ.க. கிளை தலைவராக இருந்து வந்தார்.

    இந்தநிலையில் பணம் கொடுக்கல் வாங்கல் விவகாரம் , வழிப்பாதையில் அமர்ந்து மது அருந்தியது தொடர்பான பிரச்சினையில் கடந்த 3-ந்தேதி இரவு நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரத்தை சேர்ந்த வெங்கடேசன் (27), திருச்சி மாவட்டம் மணப்பாறையை சேர்ந்த செல்லமுத்து (24), தேனி மாவட்டம் உத்தமபாளையத்தை சேர்ந்த சோனை முத்தையா (22) ஆகிய 3 பேரும் சேர்ந்து செந்தில்குமார், மோகன்ராஜை வெட்டிக்கொன்றனர். அதனை தடுக்க முயன்ற மோகன்ராஜின் தாயார் புஷ்பவதி (68), செந்தில்குமாரின் சித்தி ரத்தினாம்பாள் (59) ஆகியோரையும் கொடூரமாக வெட்டி கொலை செய்தனர்.

    ஒரே குடும்பத்தில் 4 பேர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பல்லடம் மட்டுமின்றி தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொலை தொடர்பாக செல்லமுத்துவை போலீசார் முதலில் கைது செய்தனர். அவர் போலீஸ் பிடியில் இருந்து தப்ப முயன்ற போது, தவறி விழுந்ததில் கால் முறிவு ஏற்பட்டு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த கொலையில் முக்கிய குற்றவாளிகளான வெங்கடேசன், சோனை முத்தையாவை 5 தனிப்படைகள் கொண்ட போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

    வெங்கடேசனின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வடக்கு அரியநாயகிபுரம் என்பதால் அங்கு சென்று பதுங்கியிருக்கலாம் என எண்ணிய தனிப்படை போலீசார் நெல்லை மாவட்டத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர். மற்றொரு கொலையாளியான சோனை முத்தையா தேனியை சேர்ந்தவர் என்பதால் அங்கு போலீசார் முகாமிட்டு தேடி வந்தனர்.

    இந்தநிலையில் வெங்கடேசன், சோனை முத்தையா ஆகியோர் இன்று காலை திருப்பூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் சரணடைந்தனர். இதையடுத்து அவர்களை போலீசார் ரகசிய இடத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் பல்லடம் கோர்ட்டில் ஆஜர்ப்படுத்தவும் உள்ளனர்.

    4 பேர் கொலை காரணமாக பல்லடத்தில் கடந்த 4 நாட்களாக பதற்றம்-பரபரப்பு நிலவி வந்தது. பா.ஜ.க.வினர், பொதுமக்கள் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர். இதையடுத்து அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர்.

    இந்தநிலையில் உயிரிழந்த 4 பேர் உடல்களும் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மதியம் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. இதையடுத்து 4 பேரின் உடல்களும் கள்ளக்கிணறு மயானத்தில் அடக்கம் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்து கடந்த 4 நாட்களாக பரபரப்பாக இருந்த பல்லடத்தில் அமைதி திரும்பியுள்ளது.

    இதனிடையே கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கான காசோலையை கலெக்டர் கிறிஸ்துராஜ் வழங்கினார்.

    Next Story
    ×