search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தேனி அருகே பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு
    X

    கல்வெட்டுடன் பாவெல்பாரதி

    தேனி அருகே பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் கண்டுபிடிப்பு

    • எழுத்துக்களை வாசித்ததில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிய வந்தது.
    • முற்கால, பிற்கால பாண்டியர் காலத்தில் மன்னர்கள் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கினர்.

    சின்னமனூர்:

    தேனி மாவட்டம் கோட்டூர் பஸ் நிலையம் அருகே சித்திவிநாயகர் கோவில் உள்ளது. இதன் சுற்றுச்சுவர் பகுதியில் 2 கல்வெட்டுகள் வைகை தொல்லியல் பண்பாட்டு கழக நிறுவனர் பாவெல் பாரதி தலைமையிலான குழுவினர் கண்டுபிடித்து ஆய்வு செய்தனர்.

    இதில் உள்ள எழுத்துக்களை வாசித்ததில் கி.பி.13ம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டு என்பது தெரிய வந்தது. இதில் கோட்டூரின் பழைய பெயர் மாதேவநல்லூர் என குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த கல்வெட்டு 31 அங்குலம் நீளமும், 17 அங்குலம் அகலமும், 9 அங்குலம் கனமும் கொண்டுள்ளது. இதில் அளநாட்டைச் சேர்ந்த மாதேவநல்லூரில் தென்னடை பிரானார் கோவில் அகம்படி முதலிகளில் வடுகன் திருவாலி சீவலப்பன் என்ற வாசகம் தொடர்ச்சியின்றி உள்ளது. கோவிலின் இடது புறம் உள்ள இன்னொரு கல்வெட்டில் கோட்டூரின் பெயர் கோட்டையூர் என்று இடம்பெற்றுள்ளது. இந்த கல்வெட்டின் தொடக்கப்பகுதி சிதிலமடைந்துள்ளது.

    இதில் மன்னரின் பெயரையோ, ஆட்சி குறித்தோ குறிப்பிட்டு இருக்கலாம். அதன்பின் பக்கமோ வடுவன் சீவலப்பன் நிலதானம் தொடர்பான செய்தி உள்ளது. இது குறித்து பாவெல் பாரதி கூறியதாவது:-

    முற்கால, பிற்கால பாண்டியர் காலத்தில் மன்னர்கள் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலங்களை தானமாக வழங்கினர். அதை மையப்படுத்தி ஊர்கள் உருவாக்கப்பட்டன.

    அத்தகைய ஊர்கள் நல்லூர் என அழைக்கப்பட்டன. இன்றைய கோட்டூரில் சிவன் கோவிலை நிர்மாணித்து அக்கோவிலுக்கு நிலம் தானம் வழங்கி மாதேவநல்லூர் என்று பெயர் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த கோவிலில் வீற்றிருக்கும் கடவுள் சிவன் தென்னடை பிரானார் என்று அழைக்கப்பட்டுள்ளார். இந்த கல்வெட்டுகள் குறித்து தஞ்சாவூர் கல்வெட்டுக்கழகம் மற்றும் சென்னையில் உள்ள தொல்லியல் துறைக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×