search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழ்நாடு முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க சோதனைகள் தீவிரம்
    X

    தமிழ்நாடு முழுவதும் பணப்பட்டுவாடாவை தடுக்க சோதனைகள் தீவிரம்

    • பொதுமக்களின் புகாரை யாரும் அலட்சியப்படுத்த கூடாது.
    • அரசியல் கட்சியினரின் வாகனங்கள் அனைத்தையும் கண்டிப்பாக சோதனையிட வேண்டும்.

    சென்னை:

    பாராளுமன்றத் தேர்தல் விறுவிறுப்படைந்துள்ள நிலையில் ஒவ்வொரு வேட்பாளர்களும் பிரசாரத்தை தீவிரப்படுத்தி வருகின்றனர். வேட்பாளருடன் கட்சி நிர்வாகிகளும், தோழமை கட்சியினரும் உடன் சென்று வாக்கு கேட்டு வருகின்றனர்.

    தேர்தலுக்கு இன்னும் 2 வார காலமே உள்ள நிலையில் ஒவ்வொரு கட்சியிலும் வாக்குச்சாவடி ஏஜெண்டுகளுக்கு பணப்பட்டுவாடா செய்யப்பட்டு வருவதாக தேர்தல் கமிஷனுக்கு புகார்கள் சென்று உள்ளன.

    இதனால் பணப்பட்டு வாடாவை தடுக்க தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனையை தீவிரப்படுத்தி வருகின்றனர்.

    இந்த நிலையில் தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தலைமைச் செயலகத்தில் இன்று தேர்தல் பணியில் ஈடுபட்டு உள்ள உயர் அதிகாரிகளை அழைத்து ஆலோசனை நடத்தினார்.

    இதில் வருமான வரித்துறை, சுங்கத்துறை, அமலாக்கத்துறை அதிகாரிகள், ஜி.எஸ்.டி, கலால் துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர். இவர்களுடன் தேர்தலுக்காக நியமிக்கப்பட்டுள்ள மாநில செலவினப் பார்வையாளர்களும் பங்கேற்றனர்.

    தமிழ்நாட்டில் இதுவரை 109 கோடிக்கு மேல் பணம், நகை, பொருட்கள் பிடிபட்டு உள்ள நிலையில் பணப்பட்டு வாடாவை தடுக்க சோதனையை தீவிரப்படுத்த வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    பறக்கும் படையினர் ஒரே இடத்தில் நின்று சோதனையில் ஈடுபடாமல் பல பகுதிகளுக்கும் சென்று சோதனையிட வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.

    சிவிஜில் செயலி மூலம் பொதுமக்களிடம் இருந்து 1822 புகார்கள் வந்துள்ளதால் அவ்வாறு பெறப்படும் புகாரின் மீது சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உடனடி விசாரணை நடத்த வேண்டும் என்றும் கூறினார்.

    பொதுமக்களின் புகாரை யாரும் அலட்சியப்படுத்த கூடாது. இந்த புகாரின் மீது என்ன நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது என்ற விவரத்தை தேர்தல் ஆணையத்துக்கு உடனுக்குடன் தெரியப்படுத்த வேண்டும் என்று சத்யபிரதா சாகு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    அரசியல் கட்சியினரின் வாகனங்கள் அனைத்தையும் கண்டிப்பாக சோதனையிட வேண்டும். எந்த வாகனமும் அதில் விதிவிலக்கல்ல என்றும் அவர் கூறினார்.

    இதனால் இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் வாகன சோதனையும் தீவிரம் அடைந்துள்ளது.

    Next Story
    ×