என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
கடைகளில் தமிழ் பெயர் பலகை வைக்காவிட்டால் அபராதம்- தமிழக அரசு
- அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும்.
- தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற வேண்டும்.
சென்னை:
தமிழ்நாட்டில் பெரும்பாலான கடைகள் மற்றும் வணிக நிறுவனங்களின் பெயர் பலகைகள் ஆங்கிலத்தில் தான் உள்ளது. அனைத்து பெயர் பலகையிலும் தமிழைப் பயன்படுத்துவதை கட்டாயமாக்க வேண்டும் என்றும் அனைத்து பொது இடங்களிலும் உள்ள பெயர் பலகைகள் தமிழ் மொழியில் எழுதப்பட வேண்டும் என்றும் பல ஆண்டுகளாக தமிழ் ஆர்வலர்கள், அரசியல் கட்சித் தலைவர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.
தமிழக அரசின் தமிழ் வளர்ச்சித் துறையும், தொழிலாளர் நல ஆணையமும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து கடைகள் வணிக நிறுவனங்கள் மற்றும் உணவு நிறுவனங்களின் பெயர் பலகை தமிழில் இருக்க வேண்டும் என்ற விதி பின்பற்றப்பட வேண்டும். இல்லையென்றால் சட்டப்படி கடுமையான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. ஆனாலும் இதை முழுமையாக செயல் படுத்த முடியவில்லை.
இந்த நிலையில் தமிழில் பெயர் பலகை வைக்க நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் ஏற்கனவே ஒருவர் மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு விசாரணைக்கு வந்த போது தமிழில் பெயர் பலகை வைக்காத நிறுவனங்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வருவதாக அரசின் சார்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்பு அபராதம் 50 ரூபாய் என இருந்த நிலையில் இப்போது ரூ.2000 அபராதம் விதிக்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதன் பிறகு தொழிலாளர் நலத்துறை சார்பில் தமிழில் பெயர் பலகை வைக்காத கடைகள் மற்றும் நிறுவனங்களின் மீது எடுக்கப்படும் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டு வருகிறது.
இது குறித்து தமிழ் வளர்ச்சித் துறை அதிகாரி கூறியதாவது:-
அரசு வெளியிட்டுள்ள அரசாணைப்படி ஒவ்வொரு நிறுவனங்களின் பெயர் பலகையும் தமிழில் இருக்க வேண்டும். அவர்கள் பிற மொழியை பயன்படுத்துவதை நாங்கள் தடுக்கவில்லை. ஆனால் அந்த பெயர் பலகையில் தமிழ் பெரிய அளவில் இருக்க வேண்டும்.
தமிழ், ஆங்கிலம் மற்றும் பிறமொழி பெயர் 5:3:2 என்ற வகையில் இடம் பெற வேண்டும்.
எல்லா இடங்களிலும் தமிழ் பெயர் பலகைகள் வைக்கப்படுவதை உறுதி செய்ய அடிக்கடி ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சி.வி.கணேசன் மற்றும் தமிழ் வளர்ச்சி செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் ஆகியோர் எங்கு சென்றாலும் தமிழில் பெயர் பலகை வைக்குமாறு அறிவுறுத்தி வருகின்றனர்.
அதுமட்டுமின்றி இந்த இரு துறைகளின் சார்பில் கூட்டாக மாதம் இருமுறை ஆய்வுக் கூட்டமும் நடத்தப்படுகிறது. இதன் காரணமாக வணிக நிறுவனங்களில் பெயர் பலகைகளை தமிழில் வைக்க அதிகாரிகள் வலியுறுத்தி வருகின்றனர்.
அதையும் மீறி பிற மொழியில் மட்டும் பெயர்கள் இருந்தால் ரூ.2 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இப்போது தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்