search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: 1000 ஏக்கரில் பிரம்மாண்டமாக தயாராகும் மைதானம்
    X

    பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டம்: 1000 ஏக்கரில் பிரம்மாண்டமாக தயாராகும் மைதானம்

    • உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.
    • அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது.

    பல்லடம்:

    தமிழக பா.ஜனதா தலைவர் அண்ணாமலை 'என் மண் என் மக்கள்' என்ற பெயரில் நடைபயணத்தை மேற்கொண்டு வருகிறார். இந்த பாதயாத்திரை இந்த மாதம் நிறைவடைய உள்ளது. என் மண், என் மக்கள் பாதயாத்திரை நிறைவு விழாவை பாராளுமன்ற தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டமாக நடத்த பா.ஜனதா கட்சியினர் திட்டமிட்டுள்ளனர்.

    அந்த வகையில் திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே உள்ள மாதப்பூர் முத்துக்குமாரசாமி மலை எதிரே 1000 ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இங்கு வருகிற 27-ந்தேதி பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று பேசுகிறார். இதையடுத்து கூட்டத்திற்கான ஏற்பாடு பணிகள் முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.

    இது குறித்து பா.ஜனதா மாநில துணை பொதுச்செயலாளரும், பொதுக்கூட்ட பொறுப்பாளருமான ஏ.பி.முருகானந்தம் கூறியதாவது:-

    பல்லடத்தில் 27-ந்தேதி நடைபெறும் என் மண், என் மக்கள் நிறைவு விழா பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்வது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிரதமர் கலந்து கொள்ள உள்ள மாநாட்டிற்கான பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. அனைத்து உச்சகட்ட பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து வசதிகள், ஹெலிபேட் உள்ளிட்ட பல்வேறு வசதிகளை செய்வதற்காக ஆயத்தப்பணிகள் வேகமாக முடுக்கி விடப்பட்டுள்ளது.

    பொதுக்கூட்டத்தில் பா.ஜனதா கட்சியினர் சுமார் 10 லட்சம் பேர், பொதுமக்கள் சுமார் 3 லட்சம் பேர் என 13 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கிறோம். 400 ஏக்கர் பரப்பளவில் பொதுக்கூட்ட மைதானமும், வாகனங்கள் நிறுத்த சுமார் 600 ஏக்கர் என ஆயிரம் ஏக்கர் இடம் தேர்வு செய்யப்பட்டு பணிகள் மிக வேகமாக நடைபெற்று வருகிறது. மதிய உணவு உள்ளிட்ட வசதிகள் செய்யப்பட உள்ளது.

    பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், நோட்டீஸ் வழங்கியும் கல்லூரி மாணவிகளுக்கு அழைப்பு விடுத்த பா.ஜ.க.வினர்.

    பல்லடத்தில் பிரதமர் 25-ந் தேதி கலந்து கொள்வார் என ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றைய தினம் பிரதமருக்கு மிகவும் பிடித்த மனதின் குரல் நிகழ்ச்சியில் பேச வேண்டி இருந்ததால் தேதி மாற்றப்பட்டு உள்ளது. மனதின் குரல் நிகழ்ச்சியை குஜராத்திற்கு அடுத்தபடியாக தமிழகத்தில் அதிகம் பேர் கேட்டு வருகிறார்கள்.

    பா.ஜனதா ஆளும் மாநிலங்களை பின்னுக்குத்தள்ளி தமிழகம் மனதின் குரல் நிகழ்ச்சியை கேட்பதில் மூன்றாவது இடத்தில் இடம் பிடித்துள்ளது. பல்லடத்தில் நடைபெறுகின்ற மாநாட்டில் பிரதமர் மோடி கலந்து கொள்கின்ற போது வெறும் அரசியல் மாநாடாக மட்டும் அல்லாது தமிழகத்திற்கு பல்வேறு சலுகைகளை அறிவிக்கின்ற அரசு நிகழ்ச்சியாகவும் இருக்க வாய்ப்பு உள்ளது. பல்லடத்தில் பிரதமர் மோடி பங்கேற்ற பிறகு தமிழ்நாட்டில் அரசியல் மாற்றம் ஏற்படும்.

    இந்தியா கூட்டணி தற்போது ஒவ்வொரு எழுத்துக்களாக இழந்து வருகிறது. கடைசியாக ஜம்மு காஷ்மீரில் பரூக் அப்துல்லாவுக்கு இந்தியா கூட்டணி மீது நம்பிக்கை இல்லாததால் தனித்துப் போட்டியிடுவதாக அறிவித்திருக்கிறார். தமிழகம் மட்டுமே இந்தியா கூட்டணியை தாங்கிப் பிடித்துக் கொண்டிருக்கிறது. அதுவும் மூழ்கக் கூடிய கப்பலாக, எப்போது கரை தட்டி நிற்கும் என தெரியாமல் உள்ளது.பிரதமர் மோடியுடன் பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் கலந்து கொள்ள உள்ளனர். பா.ஜனதா கட்சியின் வளர்ச்சியை யாரும் தடுக்க முடியாது. பிரதமர் மோடியை ஏற்றுக்கொள்ளும் யார் வேண்டுமானாலும் பா.ஜனதா கூட்டணிக்கு வரலாம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி பங்கேற்கும் பொதுக்கூட்டத்தில் பொதுமக்கள் பங்கேற்க அழைப்பு விடுத்து திருப்பூர் மாவட்ட பா.ஜ.க.வினர் துண்டு பிரசுரம் வழங்கி அழைப்பு விடுத்து வருகின்றனர். மேலும் பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தியும், வேண்டும் மோடி, மீண்டும் மோடி என்ற வாசகத்துடன் ராட்சத பலூன்களை திருப்பூரில் பறக்கவிட்டுள்ளனர். திருப்பூர் வடக்கு மாவட்டத்திற்கு உட்பட்ட வடக்கு, தெற்கு, பல்லடம் ஆகிய தொகுதிகளில் 19 மண்டலங்களில் வாகன பிரசாரம் மூலம் நோட்டீஸ்களை வழங்கி வருகின்றனர். திருப்பூர் குமரன் கல்லூரி மற்றும் ஜெய்வாபாய் பள்ளி அருகே பெரிய பொம்மைகளை காட்சிப்படுத்தி பொதுக்கூட்டம் குறித்து விழிப்புணர்வு நோட்டீஸ்களை கல்லூரி மாணவிகள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கினர்.

    Next Story
    ×