search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    புரசைவாக்கம்-பட்டாளம் வரை பஸ் போக்குவரத்து மாற்றம்
    X

    புரசைவாக்கம்-பட்டாளம் வரை பஸ் போக்குவரத்து மாற்றம்

    • வியாசர்பாடி, செங்குன்றம், மாதவரம், பெரியார் நகர் பகுதிக்கு செல்லக்கூடிய பஸ்கள் புளியந்தோப்பு வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.
    • தற்போது மழை இல்லாத நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அதனை விரைவாக சரி செய்ய முடிகிறது.

    சென்னை:

    பெரம்பூர் பேரக்ஸ் சாலையில் ஏற்பட்ட திடீர் பள்ளத்தால் அந்த பகுதியில் போக்குவரத்து முற்றிலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

    அண்ணா சதுக்கம்-பெரம்பூர் இடையே ஓடும் 29-ஏ பஸ் மட்டும் ஓட்டேரி மேகலா தியேட்டர் வழியாக திருப்பி விடப்பட்டுள்ளது. மற்ற பஸ்கள் அனைத்தும் புளியந்தோப்பு போலீஸ் நிலையம் அருகில் இருந்து மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.

    வியாசர்பாடி, செங்குன்றம், மாதவரம், பெரியார் நகர் பகுதிக்கு செல்லக்கூடிய பஸ்கள் புளியந்தோப்பு வழியாக மாற்றி விடப்பட்டுள்ளது.

    போக்குவரத்து மாற்றப்பட்டதால் பொதுமக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகி உள்ளனர். குறிப்பாக இரு சக்கர வாகன ஓட்டிகள் குறுகிய தெருக்களிலும், சந்துக்கள் வழியாக செல்கின்றனர். புரசைவாக்கத்தில் இருந்து பட்டாளம், புளியந்தோப்பு வரை செல்லக்கூடிய பல்வேறு வழிகளில் ஆட்டோ, மோட்டார் சைக்கிள் செல்கின்றன.

    தற்போது மழை இல்லாத நேரத்தில் பள்ளம் ஏற்பட்டதால் அதனை விரைவாக சரி செய்ய முடிகிறது. மழை பெய்தால் இந்த பணி கடுமையாக பாதிக்கப்படுவதோடு பொதுமக்களுக்கு சிரமங்கள் அதிகமாக ஏற்பட்டு இருக்கும்.

    பள்ளத்தை சரி செய்யும் பணி முடியும் வரை அந்த சாலையில் போக்குவரத்து நடைபெறாது. அடுத்தடுத்து அந்த பகுதியில் பள்ளம் விழுவதற்கு காரணம்? என்ன என மண்ணின் தன்மையையும் ஆராய்கிறார்கள்.

    சமீபத்தில் பெய்த கனமழையின்போது பள்ளம் ஏற்பட்ட பகுதியில் தான் மழை வெள்ளம் அதிகளவில் தேங்கி நின்றது. அதனை வெளியேற்ற எடுத்த நடவடிக்கையால் கழிவுநீர் குழாய் பாதிக்கப்பட்டதா? எனவும் ஆய்வு செய்யப்படுகிறது.

    சம்பவ இடத்தில் குடிநீர் வாரிய தலைமை பொறியாளர் ராமசாமி, பகுதி பொறியாளர் வைதேகி உள்ளிட்ட அதிகாரிகள் முகாமிட்டு பணியினை வேகப்படுத்தி வருகின்றனர்.

    சம்பவ இடத்தை திரு.வி.க. நகர் தொகுதி எம்.எல்.ஏ. தாயகம் கவி ஆய்வு செய்தார்.

    பள்ளத்தை சரி செய்ய 5 நாட்கள் ஆகும் என்று வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.

    Next Story
    ×