search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    நாளை ராகுல் காந்தி பாத யாத்திரை- கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    ராகுல்காந்தி பேச உள்ள மைதானத்தில் போலீஸ் அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தபோது எடுத்தப்படம்.

    நாளை ராகுல் காந்தி பாத யாத்திரை- கூடலூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    • நாளையுடன் ராகுல்காந்தி கேரளாவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார்.
    • கூடலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.

    ஊட்டி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி எம்.பி. கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை ஒற்றுமை பயண பாதயாத்திரை நடத்தி வருகிறார்.

    கடந்த 7-ந் தேதி கன்னியாகுமரியில் தனது பாதயாத்திரையை தொடங்கிய அவர், தற்போது கேரளாவில் தனது பாதயாத்திரையை நடத்தி வருகிறார்.

    நாளையுடன் ராகுல்காந்தி கேரளாவில் தனது பாதயாத்திரையை முடித்து கொண்டு மீண்டும் தமிழகத்திற்கு வருகிறார். கேரள மாநிலம் மலப்புரம் மாவட்டம் நிலம்பூர் வழியாக நீலகிரி மாவட்டம் கூடலூருக்கு நாளை மாலை 3 மணிக்கு வருகிறார். அங்கு தமிழக காங்கிரஸ் கட்சி சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்படுகிறது.

    பின்னர் ஆமைகுளம் என்ற இடத்தில் இருந்து பாத யாத்திரையை தொடங்குகிறார். தொடர்ந்து கோழிபாலம், பள்ளிப்பாடி, நந்தட்டி, செம்பாலா வழியாக கூடலூர் நகர் பகுதிக்குள் ராகுல்காந்தி பாதயாத்திரையாக வருகிறார். அவருடன் கோவை, நீலகிரி மாவட்டத்தில் உள்ள காங்கிரஸ் கட்சியின் நிர்வாகிகள் தொண்டர்களும் வருகின்றனர்.

    பின்னர் பொதுக்கூட்டம் நடைபெறும் கூடலூர் புதிய பஸ் நிலைய பகுதிக்கு செல்லும் அவர் பொதுக்கூட்டத்தில் பேசுகிறார். தொடர்ந்து அவர் அங்குள்ள தனியார் பள்ளி மைதானத்தில் கேரவன் வேனிலேயே தங்கி ஓய்வெடுக்கிறார்.

    பின்னர் மறுநாள் 30-ந் தேதி கர்நாடகாவுக்கு புறப்பட்டு செல்கிறார். ராகுல்காந்தி வருகையை முன்னிட்டு அவர் பாதயாத்திரை மேற்கொள்ளும் சாலைகளில் இருபுறமும் உள்ள கட்டிடங்களில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    பொதுக்கூட்டம் நடைபெறும் மைதானத்திலும் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மேலும் கூடலூர் நகரில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அடிக்கடி சோதனை மேற்கொண்டனர்.அங்கு சந்தேகப்படும்படியாக ஆட்கள் வந்து இருக்கிறார்களா என விடுதி ஊழியர்களிடம் விசாரணை நடத்தினர்.

    முன்னதாக ராகுல்காந்தி பங்கேற்கும் பொதுக்கூட்டம் நடைபெறும் இடம், இரவில் தங்கும் மைதானம் ஆகியவற்றில் செய்ய வேண்டிய பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத், ஆர்.டி.ஓ.சரவண கண்ணன் உள்பட பல்வேறு துறை அதிகாரிகள் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

    Next Story
    ×