search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பொன்னமராவதி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை: இரும்பு மேற்கூரை விழுந்து விவசாயி பலி
    X

    பொன்னமராவதி பகுதியில் சூறாவளி காற்றுடன் மழை: இரும்பு மேற்கூரை விழுந்து விவசாயி பலி

    • பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது.
    • சூறாவளி காற்றில் பொன்னமராவதி பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது.

    பொன்னமராவதி:

    தமிழகத்தில் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் பெய்யும் பருவமழை பருவம் தப்பி சென்றதால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.

    புதுக்கோட்டை மாவட்டத்திலும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மழையை எதிர்பார்த்து காத்திருந்தனர். இந்த நிலையில் வழக்கத்துக்கு மாறாக பொன்னமராவதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் நேற்றைய தினம் வெயிலின் தாக்கம் அதிகமாக காணப்பட்டது.

    பின்னர் மாலை யாரும் எதிர்பாராத விதமாக பலத்த சூறாவளி காற்று வீசியது. அடுத்த சில வினாடிகளில் கருமேகங்கள் சூழ்ந்து மழை பெய்யத் தொடங்கியது.

    இதில் பொன்னமராவதி வாரச்சந்தை நடைபெறும் பகுதியில் பலத்த காற்று வீசியதில் அப்பகுதி கடைகளில் இரும்பு கூரை பறந்தது. இதில் காய்கறி விற்று கொண்டிருந்த சொக்கநாதப்பட்டியைச் சேர்ந்த விவசாயி செல்வராஜ் (வயது 55) என்பவர் மீது ஒரு இரும்பு கூரை விழுந்து அமுக்கியது. இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். அக்கம்பக்கத்தினர் அவரை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

    பின்னர் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார்.

    மேலும் சூறாவளி காற்றில் பொன்னமராவதி பகுதியில் பல இடங்களில் மின் கம்பிகள் அறுந்து விழுந்து மின்தடை ஏற்பட்டது. சாலையோர மரங்கள் முறிந்து விழுந்தன. இதனால் பல இடங்களில் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. பின்னர் தீயணைப்பு படை வீரர்கள் ஜேசிபி இயந்திரம் மூலம் மரங்களை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சீர் செய்தனர். அதேபோன்று மின்வாரிய பணியாளர்கள் மின் இணைப்புகளை சரி செய்தனர்.

    Next Story
    ×