search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மரம் விழுந்தது
    X

    மஞ்சூர் சுற்றுவட்டாரத்தில் சூறாவளி காற்றுடன் மழை: சாலைகளில் மண்சரிவு

    • ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது.
    • எடக்காடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்துள்ளதால், கடந்த 2 வாரமாக சூறாவளி காற்றுடன் கனமழை பெய்து வருகிறது.

    கடந்த சில தினங்களாக மழை குறைந்த நிலையில் நேற்று முதல் மீண்டும் காற்றுடன் கூடிய மழை பெய்ய தொடங்கியது.

    ஊட்டி, மஞ்சூர் உள்ளிட்ட சுற்றுப்புற பகுதிகளில் பலத்த காற்றுடன் கூடிய கனமழை கொட்டியது. இதில், ஊட்டியில் இருந்து எடக்காடு செல்லும் சாலையில் குந்தா வட்டத்துக்கு உள்பட்ட பாதகண்டி என்ற பகுதியில் 30 அடி உயரத்தில் இருந்து மண்சரிந்து சாலையில் விழுந்தது. இதனால் எடக்காடு பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    ஊட்டியில், குளிச்சோலை, ஜல்லிகுழி, பிங்கர்போஸ்ட், மஞ்சூர், அவலாஞ்சி, இத்தலார் பகுதிகளில் பெரிய அளவிலான மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


    குந்தா பாலம் பகுதியில் மரம் விழுந்ததால் போக்குவரத்து தடைபட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. தீயணைப்பு மற்றும் நெடுஞ்சாலைத் துறையினர் விரைந்து வந்து மரங்கள் மற்றும் மண்சரிவை அகற்றி போக்குவரத்தை சரி செய்தனர்.

    சூறாவளி காற்றுக்கு தொட்டகம்பை, மேல்குந்தா, பிக்கட்டி, எடக்காடு, ஓணிகண்டி உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், வர்த்தக நிறுவனங்களின் பெயர் பலகைகள், வீட்டு கூரை ஓடுகள் சூறாவளி காற்றில் தூக்கி வீசப்பட்டது.

    மரக்கிளைகளும் முறிந்து விழுவதாலும், ஒன்றோடு ஒன்று உரசுவதாலும் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அடிக்கடி மின் துண்டிப்பு ஏற்படுகிறது. இதனால் பொதுமக்கள் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர்.

    மழை, சூறாவளி காற்றுடன் கடும் குளிரும் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் அதிகபட்சமாக அவலாஞ்சியில் 18.2 செ.மீ மழை பதிவாகி உள்ளது.

    மாவட்டத்தில் பெய்த மழை அளவு மி.மீட்டரில் வருமாறு:-

    அவலாஞ்சி-182, அப்பர் பவானி-90, ஓவேலி-68, குந்தா-66, எமரால்டு-52, நடுவட்டம்-45, தேவாலா-41, கிளைன்மார்கன்-36 அப்பர் கூடலூர், பாலகொலா-35, கூடலூர்-34, பாடந்தொரை-32, செருமுள்ளி-31.

    Next Story
    ×