search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை
    X

    தமிழகத்தில் சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்- ராமதாஸ் கோரிக்கை

    • மக்களுக்கு நன்மைகளை செய்வதிலும், முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம்.
    • அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    தமிழ்நாடு அரசின் சான்றிதழ்களைப் பெறவும், நலத்திட்ட உதவிகளைப் பெறவும் பொதுமக்களை அலையவிடக்கூடாது என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அதிகாரிகளுக்கு ஆணையிட்டுள்ளார். மக்களுக்கு அரசின் சேவைகள் தாமதமின்றி கிடைக்க வேண்டும் என்ற முதல்-அமைச்சரின் அக்கறை பாராட்டத்தக்கது.

    பொதுமக்கள், மாணவர்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினருக்கும் அரசின் சேவைகள் குறித்த நேரத்தில் வழங்கப்படுவதை உறுதி செய்ய வேண்டும் என்றால், அதற்கான ஒரே தீர்வு பொதுச்சேவை பெறும் உரிமை சட்டத்தை நிறைவேற்றுவது மட்டும் தான். இந்த சட்டம் அண்டை மாநிலங்களான கேரளம், கர்நாடகம் உள்ளிட்ட 20 மாநிலங்களில் நடைமுறையில் உள்ளது. அந்த 20 மாநிலங்களையும் விட தமிழ்நாட்டில் தான் இச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான தேவை மிக அதிகமாக உள்ளது.

    தமிழ்நாட்டில் பொதுச்சேவை சட்டம் இயற்றப்பட்டால், சாதிச்சான்றிதழ், பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, திருமண பதிவுச் சான்று, வாக்காளர் அடையாள அட்டை, குடும்ப அட்டை, நில ஆவணங்களின் நகல்கள் உள்ளிட்ட பல்வேறு சேவைகள் மக்களுக்கு வழங்கப்படுவதற்கான காலக்கெடு நிர்ணயிக்கப்படும்.

    குறித்த காலத்தில் சேவை கிடைக்காத மக்களுக்கு ரூ.10,000 வரை இழப்பீடு வழங்கவும் வகை செய்யப்படும். அதனால், அதிகாரிகள் குறித்த நேரத்தில் சேவை வழங்குவார்கள்.

    பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் தமிழ்நாட்டிற்கு கட்டாயம் தேவை; தமிழ்நாட்டில் பொதுச்சேவை பெறும் உரிமைச் சட்டம் இயற்றப்பட்டிருந்தால் அரசு அலுவலகங்களில் ஊழல்கள் கணிசமாக குறைந்திருக்கும் என்று சில ஆண்டுகளுக்கு முன் சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

    எனவே அதை செயல்படுத்துவதற்கு அரசு சிறிதும் தயங்கக்கூடாது என்பதே பாட்டாளி மக்கள் கட்சியின் கருத்து. இதற்காக பா.ம.க. கடந்த காலத்தில் பல்வேறு இயக்கங்களையும், போராட்டங்களையும் நடத்தியிருக்கிறது.

    மக்களுக்கு நன்மைகளை செய்வதிலும், முன்னோடித் திட்டங்களை செயல்படுத்துவதிலும் தமிழ்நாடு தான் முதன்மை மாநிலம் என்று அரசுத் தரப்பில் பெருமிதம் தெரிவிக்கப்படுகிறது. அது உண்மை என்றால், ஏற்கனவே 20 மாநிலங்களில் நடைமுறையில் இருக்கும் சேவை பெறும் உரிமைச் சட்டத்தை தமிழ்நாட்டில் கொண்டு வந்து செயல்படுத்துவதில், தமிழக அரசுக்கு என்ன தயக்கம் இருக்க முடியும்?

    அரசின் சேவைகள் பொதுமக்களுக்கு குறித்த நேரத்தில் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டியது அரசின் கடமை. அதற்காக பொதுச் சேவை பெறும் உரிமை சட்ட முன்வரைவை மார்ச் மாதம் நடைபெறவுள்ள சட்டப் பேரவைக் கூட்டத்தில் அரசு தாக்கல் செய்து நிறைவேற்ற வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×