search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    பரங்கிப்பேட்டையில் சாயக்கழிவு ஆலை அமைவதை தடை செய்ய வேண்டும்- ராமதாஸ்
    X

    பரங்கிப்பேட்டையில் சாயக்கழிவு ஆலை அமைவதை தடை செய்ய வேண்டும்- ராமதாஸ்

    • என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது.
    • சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    பரங்கிப்பேட்டை சைமா சாயக்கழிவு ஆலை அமைக்கப்பட்டு செயல்பாட்டுக்கு வந்தால், அது மிகப்பெரிய சுற்றுச்சூழல் சீர்கேடாக அமையும். அதனால் நிலத்தடி நீர்மட்டம் மிக மோசமாக பாதிக்கப்படும்.

    மற்றொருபுறம், முழுமையாக சுத்திகரிக்கப்படாத ஒரு கோடி லிட்டர் சாயக்கழிவு நீர் தினமும் கடலில் கலக்கவிடப்பட்டால் மீன்வளம் பாதிக்கப்படும். நிலத்தடி நீர்மட்டம் குறைவதால் கடல்நீர் உட்புகுந்து 20-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயம் பாதிக்கப்படும். மீன்வளம் குறைவதால் ஏராளமான மீனவ கிராமங்கள் வாழ்வாதாரத்தை இழக்கும்.

    ஒருபுறம் என்.எல்.சி நிறுவனம் நிலத்தடி நீர்வளத்தையும், சுற்றுச்சூழலையும் சூறையாடிக் கொண்டிருக்கிறது. மற்றொருபுறம் கடலூர் சிப்காட் வளாகத்தில் அமைந்துள்ள வேதி ஆலைகள் அவற்றின் நச்சுக்கழிவுகளை வெளியேற்றி சுற்றுச்சூழலையும், இயற்கை வளத்தையும் சிதைத்துக் கொண்டிருக்கின்றன.

    இன்னொருபுறம் சாயக்கழிவு ஆலை கடல் வளத்தையும், நிலத்தடி நீர்வளத்தையும் சுரண்டுவதற்கு அனுமதிக்கப்பட்டால் கடலூர் மாவட்டம் பாலைவனமாகி விடும். அப்படி ஒரு நிலை ஏற்படுவதற்கு அரசே துணை போகக்கூடாது.

    எனவே, பரங்கிப்பேட்டை பகுதியில் சாயக்கழிவு ஆலை அமைப்பதற்கான சைமா அமைப்பின் முயற்சிகளுக்கு தமிழக அரசு எந்த வகையிலும் ஆதரவளிக்கக்கூடாது. மாறாக, சைமாவின் சாயக்கழிவு ஆலைக்கு அளிக்கப்பட்டுள்ள அனுமதியை மத்திய, மாநில அரசுகள் ரத்து செய்ய வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×