என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
தமிழ்நாடு
பாதிக்கப்பட்ட குறுவை சாகுபடி பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40 ஆயிரம் இழப்பீடு வழங்க வேண்டும்- ராமதாஸ் அறிக்கை
- காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது.
- வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.
சென்னை:
பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
காவிரி பாசன மாவட்டங்களில் தண்ணீர் பற்றாக்குறை காரணமாக வாடிய சுமார் 40,000 ஏக்கர் குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5,400 வீதம் இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கர்நாடகத்திடமிருந்து உரிய காவிரி நீரை பெற்றுத் தர தவறியதால் 2 லட்சம் ஏக்கரில் குறுவை பயிர்கள் கருகி வரும் நிலையில், 40,000 ஏக்கருக்கு மட்டும் இழப்பீடு வழங்கப்படும் என்று அரசு அறிவித்திருப் பதை கண்துடைப்பாகவே பார்க்க வேண்டியிருக்கிறது.
காவிரி பாசன மாவட்டங்களில் அறுவடை செய்ய தயாராகாத 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான குறுவைப் பயிர்களை காப்பாற்ற முடியாது. அவ்வாறு இருக்கும் போது 40 ஆயிரம் ஏக்கரில் மட்டும் தான் பாதிப்பு என்று எந்த வகையில் அரசு கணக்கிட்டது என்பது தெரியவில்லை.
அதுமட்டுமின்றி, சேதமடைந்த பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் தான் இழப்பீடு வழங்கப்படும் என்று அறிவித்திருப்பது உழவர்கள் மீது தொடுக்கப்பட்ட தாக்குதலாகும்.
காவிரியில் தண்ணீர் வராததால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவிலான பயிர்களுக்கும் ஏக்கருக்கு ரூ. 40,000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டிய தார்மிகக் கடமை தமிழக அரசுக்கு இரு வழிகளில் உள்ளது. முதலாவது, கர்நாடகத்தில் காவிரி மற்றும் அதன் துணை ஆறுகளின் குறுக்கே கட்டப்பட்டுள்ள அணைகளில் இன்று காலை நிலவரப்படி கூட 66 டி.எம்.சி தண்ணீர் உள்ள நிலையில், அங்கிருந்து காவிரி பாசன மாவட்டங்களுக்கு தண்ணீர் பெற்றுத்தர வேண்டிய கடமையில் தமிழ்நாடு அரசு தோற்றுவிட்டது. அத்தகைய கடமை தவறுதலுக்காகவே தமிழக அரசு இழப்பீடு தர வேண்டும்.
இரண்டாவதாக, குறுவை நெற்பயிர்களுக்கு தமிழக அரசு காப்பீடு வழங்கி யிருந்தால், தண்ணீரின்றி கருகிய பயிர்களுக்கு காப்பீடு நிறுவனங்களிடமிருந்து ஏக்கருக்கு அதிக பட்சமாக ரூ.30 ஆயிரம் இழப்பீடு கிடைத்திருக்கும். ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு வரை குறுவை நெல்லுக்கு காப்பீடு வழங்கப்பட்டு வந்தது.
ஆனால், தி.மு.க. அரசு பொறுப்பேற்ற பிறகு குறுவைக்கு காப்பீடு வழங்குவது நிறுத்தப்பட்டுவிட்டது. அதுமட்டுமின்றி, குறுவை பயிர்களுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டால், அதை இயற்கைப் பேரிடர் நிவாரண நிதியிலிருந்து தமிழக அரசு ஈடு செய்யும் என்று அறிவிக்கப் பட்டது. அந்த வகையில் வறட்சியால் பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப்பீட்டை அரசு தான் வழங்க வேண்டும்.
பாதிக்கப்பட்ட குறுவை பயிர்களுக்கான இழப் பீட்டை வழங்கும் பொறுப்பு தமிழக அரசுக்கு இருக்கும் நிலையில், வெறும் 40,000 ஏக்கருக்கு மட்டும் ஏக்கருக்கு ரூ.5400 மட்டும் இழப்பீடு வழங்குவது எந்த வகையில் நியாயம்? இந்த தொகை நடவு நட்ட செலவை ஈடு செய்வதற்குக் கூட போதுமானதல்ல.
ஓர் ஏக்கரில் நெல் சாகுபடி செய்ய ரூ.25,000 வரை செலவு ஆவதாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. என்.எல்.சி நிறுவனத்தால் கடலூர் மாவட்டத்தில் நெற்பயிர்கள் அழிக்கப்பட்ட போது, அப்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் ஆணை பிறப்பித்தது.
அவற்றைக் கருத்தில் கொண்டு, வறட்சி யால் பாதிக்கப்பட்ட 2 லட்சம் ஏக்கர் பரப்பளவி லான குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.40,000 வீதம் அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்