search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ரூ.850 கோடியில் உற்பத்தி நிலையங்கள்- 3 நிறுவனங்களுடன் தமிழக அரசு ஒப்பந்தம்

    • உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.
    • விஸ்டியன் நிறுவனமானது போர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும்.

    சென்னை:

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்க நாட்டில் அரசு முறைப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.

    அதன் தொடர்ச்சியாக நேற்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் சிகாகோவில், லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

    லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனம் வெல்டிங் பொருட்கள், ஆர்க் வெல்டிங் உபகரணங்கள், வெல்டிங் பாகங்கள், பிளாஸ்மா மற்றும் ஆக்ஸி-எரிபொருள் வெட்டும் உபகரணங்கள், ரோபோடிக் வெல்டிங் பொருட்களின் உலகளாவிய உற்பத்தி நிறுவனம் ஆகும். இது பார்ச்சூன் 1000 நிறுவனங்களில் ஒன்றாகும்.

    இந்நிறுவனத்தின் உலகளாவிய தலைமையகம் அமெரிக்க நாட்டின் ஓஹியோவின் யூக்லிட்டில் அமைந்துள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 500 கோடி ரூபாய் முதலீட்டில் செங்கல்பட்டு மாவட்டத்தில் லிங்கன் எலக்ட்ரிக் நிறுவனத்தின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, உற்பத்தி மையத்தை விரிவாக்கம் செய்வதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    விஷய் பிரிஷிஷன் நிறுவனமானது செமிகண்டக்டர்கள் மற்றும் எலக்ட்ரானிக் பாகங்களின் உற்பத்தி நிறுவனமாகும். இந்நிறுவனம் இஸ்ரேல், ஆசியா, ஐரோப்பா மற்றும் அமெரிக்கா நாடுகளில் உற்பத்தி ஆலைகளைக் கொண்டு உள்ளது, அங்கு ரெக்டி பையர்கள், டையோட்கள், ஆப்டோ எலக்ட்ரானிக்ஸ், மின்தடையங்கள், மின் தேக்கிகள் போன்றவற்றை உற்பத்தி செய்கிறது. இந்நிறுவனத்தின் தலைமையகம் அமெரிக்க நாட்டின், பென்சில்வேனியாவின் மால்வெர்னில் அமைந்து உள்ளது.

    முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் முன்னிலையில், விஷய் பிரிஷிஷன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 100 கோடி ரூபாய் முதலீட்டில் காஞ்சிபுரத்தில் சென்சார்ஸ் மற்றும் டிரான்ஸ்டி யூசர்ஸ்உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    இச்சந்திப்பின்போது, விஷய் பிரிஷிணன் நிறுவனத்தின் ஷிர்வர் ஸ்டீபன், சென்னையில் அமைந்துள்ள தங்கள் தயாரிப்பு நிறுவனத்தை விரிவுபடுத்த உள்ளதாகவும், இதன்மூலம் அதிக அளவில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என்றும், தங்கள் நிறுவனத்தின் விற்பனை அதிகரிக்கும் என்றும் தெரிவித்தார்.

    விஸ்டியன் நிறுவனமானது போர்டு மோட்டார் நிறுவனத்தின் துணை நிறுவனமாகும். அமெரிக்க நாட்டின் மிச்சிகனில் உள்ள வான் ப்யூரன் டவுன் ஷிப்பைத் தலைமையிடமாகக் கொண்டு, 17 நாடுகளில் இயங்கி வருகிறது.

    இது வாகனங்களின் காக்பிட் அனுபவத்தை மேம்படுத்தும் மின்னணு தயாரிப்புகளை வடிவமைத்தல் மற்றும் தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்றது.

    இந்நிறுவனம் மெக்சிகோ, பிரேசில், அர்ஜென்டினா, போர்ச்சுகல், இங்கிலாந்து, ஜெர்மனி, பிரான்ஸ், ஸ்லோ வாக்கியா, ருமேனியா, பல்கேரியா, ஹங்கேரி, துனிசியா, இந்தியா, சீனா, தாய்லாந்து, கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளில் உற்பத்தி மற்றும் பொறியியல் மையங்களை கொண்டுள்ளது. போர்டு, ஜென்ரல் மோட்டார்ஸ், பி.எம்.டபிள்யூ. போன்ற உலகின் பெரும் வாகன உற்பத்தியாளர்களுக்கு வாகன மின்னனுவியல் பாகங்களை தயாரித்து அளித்து வருகிறது.

    முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், விஸ்டியன் நிறுவனத்திற்கும் தமிழ்நாடு அரசிற்கும் இடையே 250 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை மற்றும் கோயம்புத்தூரில் மின்னணு உற்பத்தி மையத்தை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

    லிங்கன் எலக்ட்ரிக், விஷய் பிரிஷிஷன் மற்றும் விஸ்டியன் ஆகிய நிறுவனங்களுடன் மேற்கொள்ளப்பட்ட இப்புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் தமிழ் நாட்டு இளைஞர்களுக்கு அதிக அளவிலான வேலைவாய்ப்புகள் கிடைக்கும்.

    Next Story
    ×