search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சிக்கராயபுரம், மலையம்பாக்கத்தில் செயல்படாத கல்குவாரியில் தேங்கிய மழைநீர் குறித்து ஆய்வு- கலெக்டர் பார்வையிட்டார்
    X

    சிக்கராயபுரம், மலையம்பாக்கத்தில் செயல்படாத கல்குவாரியில் தேங்கிய மழைநீர் குறித்து ஆய்வு- கலெக்டர் பார்வையிட்டார்

    • மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.
    • தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.

    காஞ்சிபுரம்:

    சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன் கோட்டை தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன.

    சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்ட போது குன்றத்தூர் அருகே உள்ள சிக்கராயபுரம் பகுதியில் உள்ள கைவிடப்பட்ட கல்குவாரியில் தேங்கிய தண்ணீரை சுத்தப்படுத்தி சப்ளை செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து சிக்கராயபுரம், மலையம்பாக்கம் பகுதியில் உள்ள கல்குவாரி தண்ணீரை குடிநீருக்கு பயன்படுத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    கடந்த சில நாட்களாக பூந்தமல்லி மற்றும் குன்றத்தூர் பகுதியில் விட்டு,விட்டு பலத்த மழைகொட்டி வருகிறது. இதனால் கல்குவாரிகளில் கூடுதலாக தண்ணீர் தேங்கி காணப்படுகிறது. வடகிழக்கு பருவ மழை விரைவில் தொடங்க இருப்பதையொட்டி தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை அதிகாரிகள் எடுத்து வருகிறார்கள்.

    இந்த நிலையில் வாலாஜாபாத் பேரூராட்சி பகுதிகளில் பருவமழையை முன்னிட்டு நடைபெற்று வரும் மழைநீர் வடிகால்வாய் சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டு, ஆய்வு செய்தார்.

    பின்னர் சிக்கராயபுரம் மற்றும் மலையம்பாக்கத்தில் உள்ள செயல்படாத கல்குவாரியில் தேங்கி நிற்கும் மழைநீர் பகுதியையும் கலெக்டர் கலைச்செல்வி மோகன் பார்வையிட்டார். அப்போது அங்கு தேங்கி நிற்கும் தண்ணீரின் அளவு மற்றும் குடிநீருக்கு பயன்படுத்தும் முறை குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தார். மேலும் கல்குவாரிகளை தொடர்ந்து கண்காணிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

    ஆய்வின் போது மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ், ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் செல்வகுமார், உதவி ஆட்சியர் (பயிற்சி) சங்கீதா மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.

    Next Story
    ×