search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்- கே.எஸ்.அழகிரி கருத்து
    X

    சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்- கே.எஸ்.அழகிரி கருத்து

    • மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் கழித்து தான் அமலுக்கு வரும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப்பது இந்த ஏமாற்று வேலைக்கு சிறந்த சான்று.
    • சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது.

    சென்னை:

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கடந்த ஐந்து ஆண்டுகளில் அகில இந்தியப் பணிகளுக்கான நேரடி நியமனங்களில் இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின சாதிகள் மற்றும் பட்டியலினப் பழங்குடியினர் பிரதி நிதித்துவம் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருப்பதைக் காட்டும் சில திடுக்கிடும் புள்ளி விவரங்கள் வெளிவந்துள்ளன.

    இதற்கு ஒரே வழி, தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்தி வரும் சாதிவாரி கணக்கெடுப்பு மட்டுமே. பின்தங்கிய வகுப்பினருக்கு எதிராக பா.ஜனதா அரசு இருப்பதால் தான், சாதிவாரி கணக்கெடுப்பை முடக்கப் பார்க்கிறார்கள். மகளிர் இடஓதுக்கீடு கூட முழு மனதாக நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்படவில்லை. தேர்தலை வாக்கு வங்கி அரசியலை கணக்கில் கொண்டு, கண்துடைப்புக்காக நிறைவேற்றியிருக்கிறார்கள். மகளிர் இட ஒதுக்கீடு 10 ஆண்டுகள் கழித்து தான் அமலுக்கு வரும் என்று ஒன்றிய பாஜக அரசு அறிவித்திருப்பது இந்த ஏமாற்று வேலைக்கு சிறந்த சான்று.

    சமூக நீதியில் அக்கறை இல்லாத அரசாக ஒன்றிய பாஜக அரசு இருக்கிறது. அதனால் தான் சாதிவாரி கணக்கெடுப்பை ராகுல் காந்தி தொடர்ந்து வலியுறுத்திக் கொண்டிருக்கிறார். சாதிவாரி கணக்கெடுப்பால் மட்டுமே சமூக நீதியை நிலைநாட்ட முடியும்.

    வருகிற 2024 தேர்தலுக்கு பிறகு இந்தியா கூட்டணி வெற்றி பெற்று ஆட்சி மாற்றம் ஏற்படுகிற போது, சாதி வாரி கணக்கெடுப்பு நடத்தி சமுதாயத்தில் இருக்கிற ஏற்றத்தாழ்வுகளை, இடஒதுக்கீட்டில் மறுக்கப்பட்ட உரிமைகளை மீட்டெடுத்து, சமூக நீதியை நிலைநாட்டுவோம் என்று தலைவர் ராகுல்காந்தி நாட்டு மக்களுக்கு வாக்குறுதி வழங்கியிருக்கிறார். அது நிறைவேறுகிற காலமே சமூகநீதியின் பொற்காலமாக இருக்கும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×