search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை களங்கப்படுத்தியதாக புகார்: சபாநாயகர் அப்பாவு கோர்ட்டில் ஆஜர்
    X

    அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை களங்கப்படுத்தியதாக புகார்: சபாநாயகர் அப்பாவு கோர்ட்டில் ஆஜர்

    • வழக்கு விசாரணையின்போது, அப்பாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உள்ளார் என்று கூறப்பட்டது.
    • கோர்ட்டின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது.

    சென்னை:

    சென்னையில் நடந்த புத்தக வெளியீட்டு விழாவில் பேசிய சபாநாயகர் அப்பாவு, ஜெயலலிதா மரணம் அடைந்த நேரத்தில் 40 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் தி.மு.க.வில் இணைய தயாராக இருந்ததாகவும் அதை தி.மு.க., தலைவர் மு.க.ஸ்டாலின் ஏற்க மறுத்துவிட்டதாகவும் கூறியிருந்தார்.

    இவரது பேச்சு அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் இருப்பதாக கூறி சபாநாயகர் அப்பாவு-வுக்கு எதிராக அ.தி.மு.க. வழக்கறிஞர் அணி இணைச் செயலாளர் பாபு முருகவேல் அவதூறு வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

    இந்த வழக்கு சென்னை மாவட்ட கலெக்டர் அலுவலக கட்டிடத்தில் உள்ள எம்.பி., எம்.எல்.ஏ.க்களுக்கு எதிரான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு கோர்ட்டில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கு விசாரணையின்போது, அப்பாவுக்கு சம்மன் அனுப்பியும் அவர் ஆஜராகாமல் உள்ளார் என்று கூறப்பட்டது. இந்த வழக்கு நீதிபதி ஜெயவேல் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    அப்போது சபாநாயகர் அப்பாவு நேரில் ஆஜரானார். அவர், கோர்ட்டு சம்மனை பெற மறுத்து விட்டதாக கூறியது தவறு. தனக்கு கோர்ட்டு சம்மன் ஏதும் வரவில்லை. கோர்ட்டின் மீது தனக்கு மிகுந்த மரியாதையும், நம்பிக்கையும் உள்ளது. இதுசம்பந்தமாக விசாரிக்க வேண்டும் என்று நீதிபதியிடம் சபாநாயகர் அப்பாவு கூறினார்.

    இதையடுத்து வழக்கின் விசாரணையை செப்டம்பர் 26-ந்தேதிக்கு நீதிபதி ஜெயவேல் தள்ளிவைத்தார். நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அப்பாவு, சென்னையில் இருந்த போதும் சரி, நெல்லை மாவட்டத்தில் சொந்த கிராமத்தில் இருந்த போதும் தனக்கு எந்த சம்மனும் வரவில்லை. சென்னையில் உள்ள வீட்டில் இருந்த காவலர்களிடம் கடிதங்கள் வந்தால் தெரிவிக்கும்படி கூறியிருந்தேன். அங்கேயும் எதுவும் வரவில்லை. இதுகுறித்து கோர்ட்டில் புகார் அளித்துள்ளேன் என்று தெரிவித்தார்.

    Next Story
    ×