search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கூட்டணிக்கு வெளியில் பேசுவது ஏற்புடையது அல்ல- திருமாவளவன்
    X

    கூட்டணிக்கு வெளியில் பேசுவது ஏற்புடையது அல்ல- திருமாவளவன்

    • தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சீமான் கூறிய கருத்து அமைந்துள்ளது.
    • தமிழகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துவிட்டது என்று கூறுவது கவர்னரின் அரசியல் விமர்சனம்.

    கும்பகோணம்:

    விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் எம்.பி. தஞ்சை மாவட்டம், திருப்பனந்தாளில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    தி.மு.க. கூட்டணியில் குழப்பத்தை ஏற்படுத்தும் முயற்சியில் சீமான் கூறிய கருத்து அமைந்துள்ளது. இது அவர்களின் அரசியல் ஆதாயத்திற்காக செய்கின்ற முயற்சி. தி.மு.க. கூட்டணிக்குள் பேசக் கூடிய அரசியலை கூட்டணிக்கு வெளியில் உள்ளவர்கள் பேசுவது ஏற்புடையது அல்ல.

    அது அவர்களின் சூது, சூழ்ச்சி நிறைந்த ஒரு அரசியல். டெல்லியில் இருப்பது போல் கூட்டணி ஆட்சி தமிழகத்தில் உருவாக வேண்டும் என்றால் இங்கு ஆண்ட கட்சிகளாக அல்லது ஆளும் கட்சிகளாக இருக்கும் அ.தி.மு.க., தி.மு.க. தனித்து ஆட்சி செய்யக்கூடிய அதிகாரத்தை பகிர்ந்தளிக்க இயலாத நிலையில் மக்களின் ஆதரவை பெற்றிருக்கிறார்கள் என்றுதான் அதற்கு பொருள். இந்த அடிப்படையை உணராத கட்சி அல்ல, விடுதலை சிறுத்தைகள் கட்சி.

    கடந்த 1999-ம் ஆண்டு முதன் முதலில் தேர்தல் களத்தில் விடுதலைச்சிறுத்தைகள் கட்சி அடி எடுத்து வைத்த போது ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு என்பதுதான் எங்களது முழக்கமாகும். எங்களுக்கே அந்த விழிப்புணர்வு இருக்கும் போது

    நூற்றாண்டுகளை கடந்த காங்கிரஸ் கட்சிக்கு தெரியாதது அல்ல, கம்யூனிஸ்டு கட்சியினர் தெரியாதவர்கள் அல்ல.

    எனவே எந்த நேரத்தில் எதை கேட்க வேண்டும்? எப்படி கேட்க வேண்டும்? அதற்கான காலம் கனிந்திருக்கிறதா? இதையெல்லாம் அறிந்தவர்கள் தான் தி.மு.க. கூட்டணியில் இருக்கின்றோம். எங்களுக்கு கேட்கவேண்டிய நேரத்தில் கேட்கும் வலிமை வரும்.

    ஆளுங்கட்சி அவர்களது எதிர்காலத்தை கருத்தில் கொண்டு யாரையும் துணை முதலமைச்சர் ஆக்கலாம். ஒருவர் அல்ல, பலரை கூட துணை முதலமைச்சர் ஆக்கலாம். எந்த அதிகாரத்தையும் அவர்கள் மாற்றிக் கொள்ளலாம்.

    தி.மு.க. ஆட்சியை சீர்குலைக்க வேண்டும் என்பது தமிழக கவர்னர் ஆர்.என். ரவியின் செயல் திட்டம்.

    இந்தியாவிலேயே மிக சிறப்பான கல்வி திட்டங்களுடன் இயங்கும் மாநிலங்களில் தமிழ்நாடும் ஒன்று. தமிழகத்தில் கல்வித்தரம் தாழ்ந்துவிட்டது என்று கூறுவது கவர்னரின் அரசியல் விமர்சனம்.

    அவர் அரசியல்வாதியாக தான் இருக்கிறாரே தவிர, கவர்னர் என்பதை மறந்து விடுகிறார். கவர்னராக இருந்து அவர் கருத்துக்களை சொல்ல வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    Next Story
    ×