search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆக்ரோஷம் காட்டிய 2,150 காளைகள்
    X

    திருச்சி, புதுக்கோட்டை, கரூர் மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு ஆக்ரோஷம் காட்டிய 2,150 காளைகள்

    • தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வருகிறது.
    • சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.

    திருச்சி:

    தமிழர் திருநாளாம் தைப்பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்தில் பாரம்பரியம் மிக்க ஜல்லிக்கட்டு போட்டி பல்வேறு ஊர்களில் வெகு விமரிசையாக நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த ஆண்டுக்கான முதல் ஜல்லிக்கட்டு போட்டி புதுக்கோட்டை மாவட்டம் தச்சங்குறிச்சியில் கடந்த 8-ந்தேதி நடைபெற்றது. அதையடுத்து மதுரை மாவட்டம் அவனியாபுரம், பாலமேட்டிலும், திருச்சி மாவட்டத்தில் முதல் ஜல்லிக்கட்டு நேற்று பெரியசூரியூரிலும் நடந்தது.

    அந்த வகையில், திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே ஆவாரங்காட்டில் உள்ள பொன்னர் சங்கர் கோவில் திடலில் ஜல்லிக்கட்டு போட்டி இன்று நடைபெற்றது. பாலக்குறிச்சி, கலிங்கப்பட்டி, சோலையம் மாபட்டி, கீரணிப்பட்டி ஆகிய நான்கு கிராம மக்களால் இந்த ஜல்லிக்கட்டு விழாவானது நடத்தப்படுகிறது.

    ஸ்ரீரங்கம் வருவாய் கோட்டாட்சியர் செல்வம் ஜல்லிக்கட்டு போட்டியை கொடியசைத்து தொடங்கி வைத்தார். முதலில் ஒரே நேரத்தில் 4 கோவில் காளைகள் அவிழ்கப்பட்டதைத் தொடர்ந்து திருச்சி, திண்டுக்கல், மதுரை, சிவகங்கை, புதுக்கோட்டை, தேனி ஆகிய மாவட்டங்களில் இருந்து கொண்டு வரப்பட்ட 650 ஜல்லிக்கட்டு காளைகள் கோவில் திடலில் அமைக்கப்பட்டுள்ள தற்காலிக வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டு வருகின்றன.

    சீறிப்பாய்ந்து வந்து ஆக்ரோஷம் காட்டிய காளைகளை அடக்க 300 மாடுபிடி வீரர்கள் ஒரு பிரிவுக்கு 50 வீரர்கள் என 6 பிரிவுகளாக களம் இறக்கப்பட்டு வருகின்றனர். வெற்றியை ருசிப்பது யார் காளையர்களா? காளையா? என்ற போட்டியில் களமே ஆராவாரம் பூண்டுள்ளது.

    போட்டியில் வீரர்களின் பிடிக்கு அடங்க மறுத்து வெற்றி பெறும் காளைகளுக்கும், காளைகளை அடக்கி வெற்றி பெற்ற காளையர்களுக்கும் தங்கம் மற்றும் வெள்ளி காசுகள், பீரோ, கட்டில், கிரைண்டர், சைக்கிள், ரொக்கப் பணம் உள்ளிட்ட ஆயிரக்கணக்கான பரிசுகள் வழங்கப்பட்டன.

    தமிழகத்தில் அதிக ஜல்லிக்கட்டு நடைபெறும் மாவட்டமாக புதுக்கோட்டை இருந்து வருகிறது. அந்த வகையில் ஆலங்குடி அருகே வன்னியன்விடுதியில் சித்தி விநாயகர், மாயன் பெருமாள் கோவில் பொங்கலையொட்டி இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடந்தது. இந்த போட்டியில் முன்பதிவு செய்யப்பட்ட 700 காளைகள் களமிறக்கப்படுகிறது.

    ஜல்லிக்கட்டு போட்டியை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தொடங்கி வைத்தார். முன்னதாக மாவட்ட கலெக்டர் கவிதா ராமு முன்னிலையில் மாடுபிடி வீரர்கள் உறுதிமொழி எடுத்துக் கொண்ட பின்னர் கோவில் காளை வாடிவாசல் வழியாக அவிழ்த்து விடப்பட்டது. அதனை யாரும் பிடிக்கவில்லை.

    இதையடுத்து புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், கரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் இருந்து கொண்டுவரப்பட்ட காளைகள் ஒன்றன்பின் ஒன்றாக வாடிவாசல் வழியாக அவிழ்க்கப்பட்டது. அந்த காளைகளை மாடுபிடி வீரர்கள் திமிலை பிடித்து அடக்கினர்.

    இதில் பெரும்பாலான காளைகள் தன்னை நெருங்க விடாதவாறு களத்தில் நின்று விளையாடியது. அந்த காளைகள் பரிசுகளை வென்றது. அதேபோல் ஜல்லிக்கட்டு விதிகளின்படி காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களும் பரிசு மழையில் நனைந்தனர். அவர்களுக்கு தங்கம், வெள்ளி காசுகள், கட்டில், பீரோ, சைக்கிள், சேர்கள், அண்டா உள்ளிட்ட ஏராளமான பரிசுப் பொருட்கள் வழங்கப்பட் டன. 300-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    இதேபோல் கரூர் மாவட்டம் குளித்தலை அருகே தோகைமலை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ராச்சாண்டார் திருமலையில் அமைந்துள்ள விரையாச்சிலை, ஈஸ்வரர் சமேத பெரியநாயகி அம்மன் மற்றும் கோலமாவயிரம் கொண்ட பிடாரியம்மன், கரையூர் மற்றும் ஸ்ரீ நீலமேகம் கோவில் ஊர் பொதுமக்கள் சார்பாக 61-வது ஆண்டாக தை பொங்கல் திருநாளை முன்னிட்டு ஜல்லிக்கட்டு விழா இன்று விமரிசையாக நடைபெற்றது.

    இதற்காக 800 காளைகளுக்கும், 400 மாடுபிடி வீரர்களுக்கும் இன்று அனுமதி டோக்கன் வழங்கப்பட்டு பங்கேற்றனர்.

    விழாவில் ராச்சாண்டார் திருமலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள சுமார் 25-க்கும் மேற்பட்ட கிராம மக்கள் பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். கரூர் மாவட்டத்திலேயே ஜல்லிக்கட்டு இங்கு மட்டுமே நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

    Next Story
    ×