search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்பட 5 அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கம்
    X

    போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்பட 5 அதிகாரிகளுக்கு காந்தியடிகள் பதக்கம்

    • கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு ரூ.32 லட்சத்து 53 ஆயிரத்து 800 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது.
    • பள்ளி-கல்லூரிகளில் 275 கள்ளச்சாராய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி 250 கிராமங்கள் கள்ளச்சாராய இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை:

    தமிழக காவல்துறையில் கள்ளச்சாராயத்தை ஒழிக்கும் பணியில் மெச்சத்தக்க வகையில் பணியாற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு வருகிறது.

    கடந்த ஆண்டு இந்த பணிக்காக விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய் உள்பட 5 பேர் தேர்வு செய்யப்பட்டிருந்தனர். இவர்களுக்கு ரூ.40 ஆயிரத்துக்கான காசோலை மற்றும் பதக்கங்களை இன்று நடைபெற்ற குடியரசு தின விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    காந்தியடிகள் பதக்கம் பெற்றவர்கள் விவரம் வருமாறு:-

    விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் ஐ.பி.எஸ். அதிகாரியான சசாங்சாய்க்கு காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டு உள்ளது. 2012-ம் ஆண்டு ஐ.பி.எஸ். அதிகாரியாக தேர்வான சசாங்சாய், திருப்பூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டாக 2021-ம் ஆண்டு ஜூன் மாதம் 7-ந்தேதி பணியில் சேர்ந்தார். திருப்பூர் மாவட்டத்தில் பணியாற்றிய காலத்தில் இவர் நடத்திய மதுவிலக்கு வேட்டையில் 9742 வழக்குகள் போடப்பட்டு 9822 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டனர்.

    கள்ளச்சாராய வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 140 வாகனங்கள் ஏலத்தில் விடப்பட்டு ரூ.32 லட்சத்து 53 ஆயிரத்து 800 அரசு கருவூலத்தில் சேர்க்கப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் 26-ந்தேதி முதல் விழுப்புரம் போலீஸ் சூப்பிரண்டாக பணிபுரிந்து வரும் சசாங்சாய் அங்கும் தீவிர மதுவிலக்கு வேட்டையில் ஈடுபட்டுள்ளார். இதனால் 790 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 843 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    பள்ளி-கல்லூரிகளில் 275 கள்ளச்சாராய விழிப்புணர்வு முகாம்களை நடத்தி 250 கிராமங்கள் கள்ளச்சாராய இல்லாத கிராமமாக அறிவிக்கப்பட்டு உள்ளது. மரக்காணத்தில் 22 பேர் பலியான கள்ளச்சாராய வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த முக்கிய குற்றவாளி மதன்குமாரை கொல்கத்தாவில் கைது செய்தும் நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதனால் காந்தியடிகள் பதக்கம் போலீஸ் சூப்பிரண்டு சசாங்சாய்க்கு வழங்கப்பட்டுள்ளது.

    சென்னை தெற்கு மத்திய நுண்ணறிவு பிரிவு துணை கண்காணிப்பாளரான காசி விஸ்வநாதனுக்கும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. நுண்ணறிவு பிரிவில் மதுவிலக்கு குற்றங்கள் தொடர்பாக சிறப்பான தகவல்களை சேகரித்துள்ள இவர் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் சிறப்பாக பணிபுரிந்துள்ளார். மயிலாடுதுறை, புதுக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டங்களில் இவர் கள்ளச்சாராயம் மற்றும் போலி மதுவை ஒழிப்பதில் தீவிரமாக செயலாற்றியுள்ளார்.

    செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவு இன்ஸ்பெக்டர் முனியசாமிக்கும் காந்தியடிகள் பதக்கம் கிடைத்துள்ளது. 2000-ம் ஆண்டு சப்-இன்ஸ்பெக்டராக பணியில் சேர்ந்த முனியசாமி, 2013-ம் ஆண்டு முதல் ஆய்வாளராக பணிபுரிந்து வருகிறார். சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றிய காலத்தில் பல வழக்குகளில் எதிரிகளை கைது செய்வதற்கும் குற்றப் பத்திரிகையை தாக்கல் செய்யவும் உதவி புரிந்துள்ளார்.

    செங்குன்றம் மதுவிலக்கு அமலாக்க பிரிவில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வரும் முனியசாமி போதை பொருட்கள் கடத்தல் வழக்கில் சிறப்பாக செயல்பட்டு வருகிறார். இதற்காக அவருக்கு பதக்கம் வழங்கப்பட்டுள்ளது.

    மதுரை மத்திய நுண்ணறிவு பிரிவு சப்-இன்ஸ்பெக்டரான பாண்டியனுக்கும் போதை பொருட்கள் மற்றும் மதுபான கடத்தல் வழக்குகளில் சிறப்பாக செயல்பட்டமைக்காக காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. 2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளில் மதுவிலக்கு சட்டத்தின்படி 160 வழக்குகளை பதிவு செய்துள்ளார். இதில் 32 வழக்குகள் கொடுங்குற்ற வழக்குகளாகும்.

    ராணிப்பேட்டை மத்திய நுண்ணறிவு பிரிவு போலீஸ் ஏட்டு ரங்கநாதனுக்கும் காந்தியடிகள் பதக்கம் வழங்கப்பட்டுள்ளது. மது விலக்கு வேட்டையில் சிறப்பாக பணியாற்றியதாக அவருக்கு பதக்கம் கிடைத்து உள்ளது.

    தமிழகத்திலேயே சிறந்த காவல் நிலையமாக மதுரை மாவட்டத்தை சேர்ந்த எஸ்.எஸ்.காலனி காவல் நிலையத்திற்கான கோப்பையை காவல் ஆய்வாளர் பூமிநாதனிடம் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

    நாமக்கல் போலீஸ் நிலையத்துக்கு 2-வது இடமும், பாளையங்கோட்டை காவல் நிலையத்துக்கு 3-வது இடமும் கிடைத்துள்ளன.

    Next Story
    ×