search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    மகளிர் உரிமைத் தொகை திட்டம்: 77 லட்சம் பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்ப பதிவு
    X

    மகளிர் உரிமைத் தொகை திட்டம்: 77 லட்சம் பெண்கள் ஆர்வத்துடன் விண்ணப்ப பதிவு

    • முதல் கட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் கடந்த மாதம் 2-ந்தேி முதல் தொடங்கியது.
    • மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    சென்னை:

    கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் கீழ் குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை தமிழக அரசின் மூலம் வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செப்டம்பர் 15-ந்தேதி காஞ்சிபுரத்தில் தொடங்கி வைக்கிறார்.

    ஒரு கோடி குடும்பத் தலைவிகளுக்கு முதல் கட்டமாக ரூ.1000 வழங்குவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகள் மூலம் விண்ணப்பம் மற்றும் டோக்கன் வினியோகம் செய்யப்படுகிறது.

    பொதுமக்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் விண்ணப்பங்களை பதிவு செய்ய வசதியாக சிறப்பு முகாம்கள் 3 கட்டமாக நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது. முதல் கட்டத்திற்கான விண்ணப்பப் படிவங்கள் வினியோகம் கடந்த மாதம் 20-ந் தேதி முதல் தொடங்கியது. வீடு வீடாக சென்று படிவங்கள் வழங்கப்பட்டன.

    அதனை தொடர்ந்து சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பப் பதிவு கடந்த 24-ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. நாளை (4-ந்தேதியுடன்) முதல் கட்ட முகாம்கள் நிறைவு பெறுகின்றன. மகளிர் உரிமைத் தொகைக்கு குடும்பத் தலைவிகள் ஆர்வத்துடன் விண்ணப்பித்து வருகின்றனர்.

    இதுவரையில் 77 லட்சம் பேர் சிறப்பு முகாம்கள் மூலம் விண்ணப்பித்து உள்ளனர். நகரம் மற்றும் கிராமப் பகுதிகளை தனித்தனியாக பிரித்து சிறப்பு முகாம்கள் நடத்தப்படுகின்றன.

    முதல் கட்ட சிறப்பு முகாம்களில் பெரும்பாலானவர்கள் விண்ணப்பித்து விட்ட நிலையில் 2வது கட்டத்திற்கான சிறப்பு முகாம்கள் 5-ந்தேதி முதல் தொடங்குகிறது. இந்த முகாம் 16-ந்தேதி வரை நடக்கிறது.

    3வது கட்டமாக விடுபட்டவர்களுக்கான சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன. இந்த முகாம்கள் 17-ந்தேதி முதல் 28-ந்தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

    சென்னையில் 1428 ரேஷன் கடைகளில் முதல் கட்டமாக 704 கடைகளுக்கு உட்பட்ட பகுதியில் கடந்த 24-ந்தேதி முதல் சிறப்பு முகாம்கள் நடந்து வருகின்றன.

    1730 சிறப்பு முகாம்களில் 2266 பயோமெட்ரிக் கருவிகள் மூலம் குடும்பத் தலைவியின் படிவங்கள் பதிவு செய்யப்படுகின்றன. கடந்த 10 நாட்களாக நடந்து வரும் சிறப்பு முகாம்கள் நாளையுடன் முடிகிறது.

    நேற்று வரை 6 லட்சத்து 24 ஆயிரத்து 116 விண்ணப்பங்கள் வினியோகிக்கப்பட்டன. இதில் 4 லட்சத்து 45 ஆயிரத்து 561 குடும்பத் தலைவிகள் விவரங்களைப் பதிவு செய்துள்ளனர். இன்றும் நாளையும் சிறப்பு முகாம்கள் நடைபெறுகின்றன.

    முகாம்களில் பதிவு செய்வோரின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. 31-ந்தேதி 19,771 பேரும் 1-ந்தேதி 14,333 பேரும் நேற்று 12,235 பேரும் பதிவு செய்தனர்.

    இந்த நிலையில் 2-வது கட்ட சிறப்பு முகாம்கள் 5-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை நடக்கிறது. 724 ரேஷன் கடை பகுதிக்கு உட்பட்ட குடும்பங்களுக்கான முகாம்கள் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. 102 வார்டுகளில் இந்த பணி மேற்கொள்ளப்படுகிறது.

    இதுகுறித்து சென்னை மாநகராட்சி கமிஷனர் ஜெ.ராதாகிருஷ்ணன் கூறியதாவது:-

    கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டம் முதல் கட்ட சிறப்பு முகாம் நிறைவடையும் நிலையில் 5-ந் தேதி முதல் 2-வது கட்ட பகுதிகளுக்கு சிறப்பு முகாம்கள் நடைபெற உள்ளன.

    இதற்கான விண்ணப்ப வினியோகம் தொடங்கியது. நேற்று வரையில் இரண்டாம் கட்டப் பகுதியில் 2 லட்சத்து 2 ஆயிரம் குடும்பங்களுக்கு படிவங்கள் வழங்கப்பட்டு உள்ளன.

    விடுபட்ட குடும்பங்களுக்கு 3-வது கட்டமாக சிறப்பு முகாம்கள் வருகிற 17-ந் தேதி முதல் 28-ந் தேதி வரை நடக்கிறது. இந்த 2 கட்டத்திலும் விடுபட்டவர்கள் கடைசி வாய்ப்பாக இதனை பயன்படுத்தி கொண்டு படிவங்களை பூர்த்தி செய்து சிறப்பு முகாம்களில் சமர்ப்பிக்க வேண்டும். இதுவரையில் 53 சதவீதம் விண்ணப்பங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இதுகுறித்து அரசின் சிறப்பு திட்ட செயலாக்க செயலாளர் தாரேஷ் அகமது கூறுகையில், தமிழகம் முழுவதும் இதுவரையில் 77 லட்சம் பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

    வராமல் போனவர்களுக்கு இன்றும், நாளையும் சிறப்பு முகாம்கள் நடக்கிறது. 5-ந் தேதி முதல் 2-வது கட்ட சிறப்பு முகாம் தொடங்குகிறது. இதற்கான விண்ணப்பப் படிவம் வழங்கும்பணி தொடங்கியுள்ளது என்றார்.

    Next Story
    ×