search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    எடப்பாடி பழனிசாமி 20-ந்தேதி ஆலோசனை: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு
    X

    எடப்பாடி பழனிசாமி 20-ந்தேதி ஆலோசனை: அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்களுக்கு அழைப்பு

    • சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20-ந்தேதி மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.
    • கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார்.

    சென்னை:

    பாராளுமன்றத்துக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடக்கிறது. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க நாடு முழுவதும் அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றன.

    தமிழகத்தில் உள்ள கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்காக தங்களை தயார்படுத்தி வருகின்றன. கட்சியை வலுப்படுத்துவது, கூட்டணி அமைப்பது உள்ளிட்ட பணிகளையும் சத்தமின்றி செய்து வருகின்றன.

    தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இடம்பெறுகின்றன. கூட்டணி கட்சிகள் ஒன்றாக இணைந்து தேர்தலை சந்திக்கின்றன.

    தி.மு.க.வை பொறுத்தவரை பாராளுமன்ற தேர்தலை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை ஏற்கனவே தொடங்கி விட்டது. பூத் கமிட்டி அமைத்து கூடுதல் உறுப்பினர்களை சேர்த்து கட்சியை வலுப்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை தி.மு.க. தொடங்கி விட்டது. இதற்காக நிர்வாகிகள் முடுக்கி விடப்பட்டுள்ளனர்.

    இதே போல் தி.மு.க. கூட்டணியில் உள்ள கட்சிகளும் பாராளுமன்ற தேர்தலுக்கு ஆயத்தமாகி வருகின்றன.

    இந்த நிலையில் அ.தி.மு.க.வும் பாராளுமன்ற தேர்தலை சந்திக்க தயாராகி வருகிறது. அ.தி.மு.க.வும் கூட்டணி அமைத்தே பாராளுமன்ற தேர்தலை சந்திக்க உள்ளது. அ.தி.மு.க.வுடன் கூட்டணி தொடருவதாக மத்திய மந்திரி அமித்ஷா தெரிவித்துள்ளார். அதே போல் பா.ஜனதாவுடன் கூட்டணி தொடருவதாக அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கூறியுள்ளார்.

    எனவே பா.ஜனதாவுடன் இணைந்து அ.தி.மு.க. பாராளுமன்ற தேர்தலை சந்திக்க வாய்ப்பு இருக்கிறது.

    இந்த நிலையில் அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் வருகிற 20-ந்தேதி நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டு உள்ளது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை கழகத்தில் 20-ந்தேதி மாலை 5 மணிக்கு அ.தி.மு.க. மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறுகிறது.

    இந்த கூட்டத்துக்கு அ.தி.மு.க. பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமை தாங்குகிறார். இதில் தலைமை கழக நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் அனைவரும் பங்கேற்கிறார்கள்.

    பாராளுமன்ற தேர்தலுக்கு இன்னும் 1 வருடமே இருக்கும் நிலையில் பூத் கமிட்டி அமைப்பது, கூடுதல் உறுப்பினர்களை சேர்ப்பது, முகவர்களை நியமிப்பது குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்படுகிறது.

    மேலும் கர்நாடக தேர்தல் தொடர்பாகவும் இந்த கூட்டத்தில் ஆலோசித்து முடிவு எடுக்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக அனைத்து மாவட்ட செயலாளர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×