search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நாளை தொடங்குகிறது- ரூ.10 கட்டணம் செலுத்தி உறுப்பினராகலாம்
    X

    அ.தி.மு.க. உறுப்பினர் சேர்க்கை நாளை தொடங்குகிறது- ரூ.10 கட்டணம் செலுத்தி உறுப்பினராகலாம்

    • விண்ணப்ப படிவங்களை நாளை முதல் தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்
    • ஒரு படிவத்தின் விலை ரூ.10. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

    சென்னை:

    கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எஸ்.டி.சோமசுந்தரம் நூற்றாண்டு விழாவில் பங்கேற்ற வி.ஐ.டி. பல்கலைக்கழக வேந்தர் ஜி.விசுவநாதன் பேசும் போது, "கட்சியில் எத்தனையோ முன்னோடிகள் இருந்தபோதும், அண்ணா, இளைஞர்களான என்னையும், எஸ்.டி.சோமசுந்தரத்தையும் வேட்பாளராக நிறுத்தினார். அண்ணா தலைமையிலான தி.மு.க. 1967-ல் ஆட்சியை பிடிக்க காரணம், அவர் அதிக அளவில் இளைஞர்களை வேட்பாளராக நிறுத்தியதுதான். அதை பழனிசாமி நினைவில் கொள்ள வேண்டும்" என்று அறிவுரை கூறி இருந்தார்.

    அதன்படி கட்சியில் புதிதாக அதிக அளவில் இளைஞர்களை சேர்க்க திட்டமிட்டுள்ளார்கள்.

    கட்சியில் உறுப்பினர் சேர்க்கை நாளை தொடங்குகிறது. இதற்காக தனியாக விண்ணப்ப படிவம் அச்சிடப்பட்டுள்ளது. இந்த விண்ணப்ப படிவங்களை நாளை முதல் தலைமை கழகத்தில் பெற்றுக்கொள்ளலாம்.

    ஒரு படிவத்தின் விலை ரூ.10. ஒரு படிவத்தில் 25 உறுப்பினர்களை சேர்க்கலாம். ஒவ்வொரு உறுப்பினரும் ரூ.10 கட்டணம் செலுத்த வேண்டும்.

    ஏற்கனவே உறுப்பினர்களாக இருப்பவர்களும் விண்ணப்பிக்க வேண்டும். அவர்களுக்கு உறுப்பினர் அட்டை புதுப்பித்து வழங்கப்படும். புதிய உறுப்பினர்களையும் பெருமளவில் சேர்க்க முடிவு செய்துள்ளனர்.

    விண்ணப்பத்தில் பெயர், வயது, பிறந்த தேதி, படிப்பு, வேலை, முகவரி உள்ளிட்ட எல்லா விபரங்களும் கேட்கப்பட்டிருக்கும்.

    ஒவ்வொரு மாவட்டத்திலும் ஏற்கனவே உறுப்பினர் ஆக இருப்பவர்கள் மட்டு மல்லாமல் அந்த பகுதியில் கூடுதல் இளைஞர்களையும், இளம்பெண்களையும் கட்சிக்குள் கொண்டு வர திட்டமிட்டுள்ளனர்.

    இதையொட்டி மாவட்ட செயலாளர்கள் ஒவ்வொருவருக்கும் செயற்குழு கூட்டத்தின்போது எவ்வளவு உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

    இப்போதைய சூழ்நிலையில் அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணி விவகாரம் அவ்வப்போது சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. எனவே கூட்டணி விவகாரத்தில் கட்சி மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கை பற்றியும் இந்த கூட்டத்தில் நிர்வாகிகளுக்கு ஆலோசனை வழங்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

    Next Story
    ×