search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு (Tamil Nadu)

    சாதி சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- அ.தி.மு.க. வலியுறுத்தல்
    X

    சாதி சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்தவரின் குடும்பத்துக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும்- அ.தி.மு.க. வலியுறுத்தல்

    • சாதிச் சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்.
    • அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்.

    சென்னை:

    அ.தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    11-ந்தேதி அன்று வேல்முருகன் என்பவர் தனது மகனுக்கு சாதிச் சான்றிதழுக்காக விண்ணப்பித்து, அச்சான்றிதழ் அரசு அதிகாரிகளால் வழங்கப்படாததால், மனமுடைந்து உயர்நீதிமன்ற வளாகத்தில் தீக்குளித்து, சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்துவிட்டார்.

    முன் ஏர் போகும் வழியில்தான் பின் ஏர் போகும் என்பதுபோல், அப்பாவி மக்களைப் பற்றி இன்றைய விடியா அரசின் ஆட்சியாளர்களைப் போலவே, அதிகார வர்க்கமும் அலட்சியமாக இருப்பது வேதனைக்குரியது.

    "பேய்க்கு வாழ்க்கைப்பட்டால், முருங்கை மரத்தில் தான் குடித்தனம் நடத்த வேண்டும்'' என்ற நிலையில் தி.மு.க-விற்கு வாக்களித்த தமிழக மக்கள் இந்த விடியா திமுக ஆட்சியில் திணறிக் கொண்டிருக்கிறார்கள். உயிரை பணயம் வைத்து தான் எந்த ஒரு சான்றிதழும் பெற முடியும் என்ற நிலைக்கு மக்களை இந்த விடியா அரசு தள்ளி இருக்கிறது.

    மகனின் சாதிச் சான்றிதழுக்காக தன் இன்னுயிரை தீந்தணலுக்கு பலியிட்ட அப்பாவி மலைக்குறவரின் செயலுக்கு இந்த விடியா அரசும், அதிகாரிகளும் தான் பொறுப்பேற்க வேண்டும்.

    நரிக்குறவர் சமுதாய மக்களுக்கு நன்மை செய்வதாக மார்தட்டிக்கொள்ளும் விடியா அரசின் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சாதிச் சான்றிதழ் பெற முடியாமல், விலைமதிக்க முடியாத உயிரை நீத்த மலைக்குறவர் குடும்பத்திற்கு என்ன சொல்லப்போகிறார்?

    சாதிச் சான்றிதழுக்காக தீக்குளித்து உயிரிழந்த வேல்முருகன் குடும்பத்திற்கு நியாயம் கிடைக்க வேண்டும்; இதற்குக் காரணமான அதிகாரிகள் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை நீதிமன்றத்தின் முன் நிறுத்த வேண்டும்; உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 25 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அவரது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வேண்டும் என்றும் இந்த விடியா தி.மு.க. அரசின் முதல்-அமைச்சரை வலியுறுத்துகிறேன்.

    இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

    Next Story
    ×