search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    Anbumani Ramadoss
    X

    மத்திய பிரதேசத்திற்கு சென்று பா.ம.க. நிர்வாகியை கைது செய்வதா? அன்புமணி ராமதாஸ் கண்டனம்

    • பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.
    • பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும்.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

    விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் தி.மு.க.வினர் அளித்த பொய்ப்புகாரின் அடிப்படையில் பதிவு செய்யப்பட்ட பொய்வழக்கில் கைது செய்யப்படும் வாய்ப்பு இருப்பதை அறிந்த முருகவேல், முன்பிணை கோரி நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

    அந்த மனு மீது நேற்று தீர்ப்பளித்த நீதிமன்றம், அவருக்கு முன்பிணை வழங்கியிருக்கிறது. முருகவேலுக்கு முன்பிணை கிடைக்க வாய்ப்பிருப்பதை அறிந்த காவல்துறை, அதற்கு முன்பாக அவரை கைது செய்ய வேண்டும் என்பதற்காக மத்தியப்பிரதேசத்திற்கு சென்று கைது செய்திருக்கிறது. இது அப்பட்டமான அரசியல் பழிவாங்கும் நடவடிக்கை ஆகும்.

    மிகச்சாதாரணமான, அதுவும் நீதிமன்றமே நிபந்தனையின்றி முன்பிணை வழங்கியுள்ள பொய் வழக்கில் தொடர்புடைய பா.ம.க. நிர்வாகி முருகவேலுவை பல லட்சம் செலவழித்து மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வந்துள்ள காவல்துறையின் கடமை உணர்வு மெய்சிலிர்க்க வைக்கிறது.

    கொலை, கொள்ளை வழக்குகளில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்யாமல் அவர்களின் சுதந்திரமான நடமாட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்கும் காவல்துறையினர், தி.மு.க.வினர் தூண்டிவிட்டார்கள் என்பதற்காக ஏதோ சர்வதேச பயங்கரவாதியை கைது செய்வது போன்று மத்தியப்பிரதேசம் வரை சென்று கைது செய்து வருவதை என்னவென்று சொல்வது?

    பா.ம.க.வினர் கொடுத்த உண்மையான புகாரின் அடிப்படையில் செய்யாறு தொகுதி தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பினர் ஜோதி உள்ளிட்ட 26 பேரையும் கைது செய்ய வேண்டும். இல்லாவிட்டால், காவல்துறையின் அனைத்து உறுப்புகளும் அழுகி விட்டன என்பதை காவல்துறையும், அதை வழி நடத்திச் செல்லும் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தமிழ்நாட்டு மக்கள் முன்னிலையில் ஒப்புக்கொள்ள வேண்டும்.

    இ்வ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×