search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு இனியாவது சுப்ரீம் கோர்ட்டில் தடை பெறவேண்டும்- அன்புமணி ராமதாஸ்
    X
    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்

    ஆன்லைன் சூதாட்டத்துக்கு இனியாவது சுப்ரீம் கோர்ட்டில் தடை பெறவேண்டும்- அன்புமணி ராமதாஸ்

    • தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
    • ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நிகழ்வதைத் தடுக்க முடியாது.

    சென்னை:

    பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

    தஞ்சாவூர் மாவட்ட சுவாமிமலையில் உள்ள தங்கும் விடுதி ஒன்றில் பணியாற்றி வந்த மயிலாடுதுறையைச் சேர்ந்த தினசீலன் என்ற இளைஞர் ஆன்லைன் ரம்மியில் லட்சக்கணக்கில் பணத்தை இழந்ததால் ஏற்பட்ட மன உளைச்சல் காரணமாகவும், மீள முடியாத கடன்சுமை காரணமாகவும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. தினசீலனை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும், நண்பர்களுக்கும் ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

    ஆன்லைன் சூதாட்டத் தடை சட்டம் ரம்மி போன்ற திறமை சார்ந்த விளையாட்டுகளுக்கு பொருந்தாது என்று கடந்த நவம்பர் 10-ஆம் தேதி உயர்நீதிமன்றம் தீர்ப்பளித்த பிறகு மிகவும் அரிதாக நிகழ்ந்து வந்த தற்கொலைகள் இப்போது தொடர்கதையாகி விட்டன. கடந்த மே 14-ந்தேதி முதல் மே 29 வரையிலான 15 நாட்களில் 5 பேர் தற்கொலை செய்து கொண்டுள்ளனர். ஆன்லைன் சூதாட்டம் தடை செய்யப்படவில்லை என்றால் ஒவ்வொரு நாளும் ஆன்லைன் சூதாட்டத் தற்கொலைகள் நிகழ்வதைத் தடுக்க முடியாது.

    ஆன்லைன் சூதாட்ட தற்கொலைகளுக்கு முடிவு கட்டுவதற்கான ஒரே தீர்வு சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்புக்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெறுவது தான் என்று தமிழக அரசை வலியுறுத்தி வருகிறேன். ஒவ்வொரு தற்கொலையின் போதும் ஆன்லைன் சூதாட்டத்தைத் தடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியும் தமிழக அரசு இன்னும் உறக்கத்திலிருந்து விழிக்கவில்லை. தமிழக அரசு இனியாவது விழித்துக் கொண்டு ஆன்லைன் சூதாட்டத்திற்கு உச்சநீதிமன்றத்தில் தடை பெற வேண்டும்; அதன் மூலம் தற்கொலைகளில் இருந்து மக்களைக் காக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    Next Story
    ×