search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்- தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்
    X

    முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்- தமிழக அரசுக்கு அண்ணாமலை சவால்

    • தமிழக போலீசார் போலி வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
    • பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    சென்னை:

    தமிழகத்தில் வட மாநிலத்தை சேர்ந்த தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வெளியான போலி வீடியோக்கள் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக தமிழக போலீசார் போலி வீடியோக்களை வெளியிட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதில் தொடர்புடையதாக கூறப்படும் உத்தர பிரதேசத்தை சேர்ந்த பா.ஜனதா பிரமுகர் மீதும் வழக்கு போடப்பட்டுள்ளது. பீகாரை சேர்ந்த சிலரும் விசாரணை வளையத்துக்குள் கொண்டுவரப்பட்டுள்ளனர். இதுதொடர்பாக தேவையற்ற கருத்துக்களை தெரிவிக்க வேண்டாம் என்று போலீசார் கேட்டுக் கொண்டுள்ளனர்.

    இந்த விவகாரம் பூதாகரமானதையடுத்து பீகார், ஜார்க்கண்ட் மாநிலங்களில் இருந்து வந்த அதிகாரிகள் தமிழகத்தில் ஆய்வு செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் அண்ணாமலை வடமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார்.

    அதில் வடமாநிலத்தவர் மீதான வெறுப்பு பிரசாரங்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முடிவுகட்ட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தது.

    அதேநேரத்தில் தி.மு.க. தொடங்கிய இந்தி எதிர்ப்பு எனும் பிழைப்புவாத நடவடிக்கைகளில் தொடங்கிய பிரசாரமே தற்போது ஏழை-எளிய மக்கள் பாதிக்கப்படும் அளவுக்கு வந்துள்ளது என்றும், வடமாநில மக்களை ஏளனமாக பேசுவதும் அவர்கள் செய்யும் தொழிலை அவமானப்படுத்துவதுமான கலாசாரத்தின் விளைவே இந்த நிலைக்கு காரணம் என்றும் அண்ணாமலை தனது அறிக்கையில் குற்றம் சாட்டி இருந்தார்.

    இதையடுத்து பா.ஜனதா தலைவர் அண்ணாமலை மீது சென்னை மாநகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவின் சைபர் கிரைம் போலீசார் 4 பிரிவுகளின் கீழ் வழக்கு போட்டுள்ளனர். இந்திய தண்டனை சட்டப்பிரிவுகளின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    153-ஐ.பி.சி. (கலகத்தை தூண்டும் வகையில் பேசுதல்), 153(ஏ) 1ஏ-(பேச்சால் அல்லது எழுத்தால் உணர்ச்சியை தூண்டுதல்), 5051பி (அறிக்கை மூலமாக குறிப்பிட்ட நபர் மீது குற்றம் சாட்டி பிரிவினையை தூண்டுதல், 5051 சி (உள் நோக்கத்துடன் செயல்படுதல்) ஆகிய 4 சட்ட பிரிவுகளின் கீழ் அண்ணாமலை மீது சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    இதனைத்தொடர்ந்து அண்ணாமலை பரபரப்பான டுவிட்டர் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், 'முடிந்தால் என்னை கைது செய்யுங்கள்' என்று தமிழக அரசுக்கு சவால் விடுக்கும் வகையில் காரசாரமான கருத்துக்கள் இடம்பெற்றுள்ளன.

    அவர் டுவிட்டரில் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு:-

    வட இந்திய சகோதரர்களுக்கு எதிரான பிரசாரத்தை அம்பலப்படுத்தியதற்காக தி.மு.க. என் மீது வழக்குப் பதிவு செய்துள்ளது என்பதை நான் புரிந்து கொள்கிறேன்.

    எனவே, அவர்கள் பேசிய வீடியோ இதோ (முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மற்றும் தி.மு.க. முன்னணி தலைவர்கள் வடமாநில தொழிலாளர்கள் பற்றி பேசிய பழைய வீடியோக்கள் இடம்பெற்றுள்ளன).

    என்னை கைது செய்ய பாசிச தி.மு.க.வுக்கு சவால் விடுக்கிறேன்.பொய் வழக்குகளை போட்டு ஜனநாயக குரல் வளையை நசுக்கி விடலாம் என்று எண்ணுகிறீர்கள்.

    ஒரு சாமானிய மனிதனாக சொல்கிறேன், 24 மணி நேரம் கால அவகாசம் உங்களுக்கு அளிக்கிறேன், முடிந்தால் என் மீது கை வையுங்கள். திறனற்ற தி.மு.க.வுக்கு திராணி இருந்தால் என்னை கைது செய்யவும்.

    இவ்வாறு அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

    வடமாநில தொழிலாளர்கள் விவகாரத்தில் பா.ஜனதா மாநிலத்தலைவர் அண்ணாமலை மீது போலீசார் திடீரென வழக்கு போட்டிருப்பதும், இதைத் தொடர்ந்து அவர் சவால் விடுக்கும் வகையில் அறிக்கை விட்டிருப்பதும் அரசியல் அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    இதற்கிடையே பீகாரை சேர்ந்த பாரதிய ஜனதா கட்சி டுவிட்டர் பக்கத்திலும் வெளிமாநில தொழிலாளர்கள் விவகாரம் தொடர்பாக சர்ச்சைக்குரிய வகையில் கருத்துக்கள் பதிவிடப்பட்டுள்ளன. இதற்கு எதிராகவும் தமிழக சைபர்கிரைம் போலீசார் நடவடிக்கை மேற் கொண்டுள்ளனர்.

    அந்த டுவிட்டர் பக்கத்தை முடக்க வேண்டும் என்று டுவிட்டர் நிறுவனத்துக்கு கடிதம் அனுப்பி உள்ளனர்.

    Next Story
    ×