search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் மாற்றத்தால் பணி பாதிப்பு- புகார்கள் குவிகிறது
    X

    அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர் பகுதிகளில் கழிவுநீர் வாரிய ஊழியர்கள் மாற்றத்தால் பணி பாதிப்பு- புகார்கள் குவிகிறது

    • கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் திணறிவருகிறார்கள்.
    • பணிமாற்றம் காரணமாக முன் அனுபவம் இல்லாத ஊழியர்கள் வேலைகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது.

    அம்பத்தூர்:

    சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் வாரியம் சார்பில் ஒவ்வொரு வார்டுக்கும் 10-க்கும் மேற்பட்ட குடிநீர் மற்றும் கழிவுநீர்வாரிய ஊழியர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் பணிபுரிந்து வருகின்றனர்.

    அவர்கள் அந்தந்த வார்டில் உள்ள பொது மக்களின் புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கும் வகையில் கழிவுநீர் அடைப்பு, சாலையில் வழிந்தோடும் கழிவு நீர்களை சரி செய்வது உட்பட பல்வேறு பணிகளை செய்து வருகிறார்கள்.

    இந்நிலையில் கடந்த 15 ஆண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த பணியாளர்களாக பணிபுரியும் ஊழியர்கள் தங்களை பணி நிரந்தரம் செய்ய கோரி கடந்த மே மாதம் பட்டினபாக்கத்தில் உள்ள குடிநீர் வாரிய தலைமை அலுவலகத்தை ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஒப்பந்த ஊழியர்கள் முற்றுகையிட்டு உண்ணாவிரதம் மற்றும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்களுடைய போராட்டத்திற்கு பல்வேறு அரசியல் கட்சியினர் ஆதரவு தெரிவித்து வந்த நிலையில் அதிகாரிகள் பேச்சு வார்த்தைக்கு வராததால் போராட்டத்தை கை விட்டு அவர்கள் மீண்டும் பணிக்குத் திரும்பினர்.

    இந்தநிலையில் அயனாவரம், வில்லிவாக்கம், அம்பத்தூர், போன்ற பகுதிகளில் பணிபுரியும் குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய ஒப்பந்த ஊழியர்களை அப்பகுதி குடிநீர் மற்றும் கழிவு நீர் வாரிய அதிகாரிகள் மாற்றுப் பணியை வழங்கி வருவதாக கூறப்படுகிறது.

    கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் ஊழியர்களுக்கு மண்டல அலுவலகத்தில் டிரைவர், கிளீனர் போன்ற பணிகளும் அங்கு டிரைவர்- கிளீனராக பணிபுரிந்தவர்களுக்கு கழிவுநீர் அடைப்பை சரி செய்யும் பணிகளும் ஒதுக்கப்படுகிறது.

    இதனால் கழிவு நீர் அடைப்பை சரிசெய்ய முடியாமல் ஊழியர்கள் திணறிவருகிறார்கள். பணிமாற்றம் காரணமாக முன் அனுபவம் இல்லாத ஊழியர்கள் வேலைகளை முடிப்பதில் தொடர்ந்து தாமதம் ஏற்பட்டு வருகிறது. இதன் காரணமாக தினந்தோறும் நூற்றுக்கணக்கான புகார்கள் தொடர்ந்து குவிந்து வருகின்றன.

    Next Story
    ×