search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல்- நீலகிரியில் விடிய, விடிய வாகன சோதனை
    X

    கலெக்டருக்கு வெடிகுண்டு மிரட்டல்- நீலகிரியில் விடிய, விடிய வாகன சோதனை

    • கலெக்டர் அம்ரித்தின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது.
    • குன்னூர், கோத்தகிரி என மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு.

    ஊட்டி:

    நீலகிரி மாவட்ட கலெக்டராக அம்ரித் பணியாற்றி வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று மாலை கலெக்டர் அம்ரித்தின் செல்போனுக்கு ஒரு குறுஞ்செய்தி வந்தது. அதில் நீலகிரியில் குறிப்பிட்ட ஒரு இடத்தில் வெடிகுண்டு வெடிக்கும் என இருந்தது. இதையடுத்து கலெக்டர் சம்பவம் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஆஷிஷ் ராவத்திடம் புகார் அளித்தார்.

    இதை தொடர்ந்து, கூடலூர், ஊட்டி, குன்னூர், கோத்தகிரி என மாவட்ட முழுவதும் போலீசார் உஷார்படுத்தப்பட்டு கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.

    நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய, விடிய மாவட்டத்தில் உள்ள அனைத்து சோதனை சாவடிகளிலும் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டது.அந்த வழியாக வந்த அனைத்து வாகனங்களும் தீவிர சோதனைக்கு பின்னரே அனுமதித்தனர். வாகன ஓட்டிகளிடமும் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    இதேபோல் ஊட்டி நகரில் போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஸ்வரன் தலைமையில் காபி ஹவுஸ், கல்லட்டி, சேரிங்கிராஸ், குன்னூர், கோத்தகிரி உள்ளிட்ட இடங்களிலும் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    மேலும் ஊட்டி நகர் பகுதியில் சுற்றி திரிந்த வெளியூர்களில் இருந்து வந்த நபர்களிடம் எதற்காக வந்துள்ளீர்கள் என்று விசாரணை நடத்தினர்.

    இதேபோல் ஓட்டல்கள், தங்கும் அறைகளில் சந்தேகப்படும்படியாக உள்ள நபர்களிடம் விசாரணை நடத்தினர். இதேபோல் பஸ் நிலையம், ரெயில் நிலையம் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் மோப்பநாய் மூலம் சோதனை நடத்தப்பட்டது.

    இதுகுறித்து ஊட்டி சைபர் கிரைம் போலீசார் வழக்குப்பதிவு செய்து வெடிகுண்டு மிரட்டல் வந்த செல்போன் எண்ணை கொண்டு வெடிகுண்டு மிரட்டல் விடுத்தது யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? எனவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வெடிகுண்டு மிரட்டல் வந்ததை தொடர்ந்து மாவட்டத்தில் உள்ள அரசு அலுவலகங்கள், பஸ் நிலையம் , ரெயில் நிலையம் உள்ளிட்ட மக்கள் அதிகம் கூடும் இடங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

    Next Story
    ×